ADDED : ஆக 20, 2025 10:33 PM

பல்லடம்; ''கோவையில் இருந்து - கரூர் வரை குழு அமைத்து நொய்யல் நதியை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என, நொய்யல் ஆறு நன்னீருக்கான இயக்கம் அறிவித்துள்ளது.
ஆனைமலையாறு - நல்லாறு தண்ணீருக்கான இயக்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி ஆகியன சார்பில், 'நொய்யல் ஆறு நன்னீருக்கான இயக்கம்' சமீபத்தில் தொடங்கப்பட்டது. நொய்யல் நதி துவங்கும் கோவை மாவட்ட பகுதி முதல் கரூர் மாவட்ட எவ்லை வரை உள்ள நொய்யல் விவசாயிகளை இணைத்து, குழுக்கள் அமைத்து, நொய்யலை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்த இயக்கம் துவங்கியுள்ளது.
இதன் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
கடந்த காலத்தில் நன்னீராக ஓடிக்கொண்டிருந்த நொய்யல் ஆறு, இன்று, கழிவுநீர் கால்வாயாக உள்ளது. குப்பைகள், கழிவு நீர் மற்றும் தொழிற்சாலை, மருத்துவக்கழிவுகள் உள்ளிட்டவை கலக்கின்றன. துார்வாருவது மட்டுமே போதாது. கழிவுகள், குப்பைகள் கலக்கப்படுவதை தடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காகவே, இந்த இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கயம் அருகே கீரணுாரில் விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
முதல் கட்டமாக, கோவையில் இருந்து கரூர் வரை நொய்யல் நதிக்கரையில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து குழுக்கள் மற்றும் நொய்யலை கண்காணிக்க 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்படும். கழிவுகள், குப்பைகள் கொட்டுவதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும். சட்டவிரோதமாக கழிவுகள், குப்பைகள் கொட்டுபவர்களை கண்காணித்து, ஆதாரங்களுடன், அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்.
உள்ளாட்சி அமைப்புகள், கழிவு நீரை சுத்திகரித்து விவசாயிகளுக்கு தான் தர வேண்டுமே தவிர, அதை, நேரடியாக நொய்யலில் கலக்க அனுமதிக்க மாட்டோம். நமது காலத்தில் நொய்யலை மீட்காவிட்டால், இனி எப்போதும் மீட்க முடியாது.
இவ்வாறு, அவர் கூறினார்.