/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சவுக்கு மரச்சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் நடவு
/
சவுக்கு மரச்சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் நடவு
சவுக்கு மரச்சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் நடவு
சவுக்கு மரச்சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் நடவு
ADDED : அக் 01, 2024 11:01 PM

உடுமலை : சவுக்கு மரச்சாகுபடி அதிக வருவாய் தரும் நிலையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், உடுமலையில் இரு இடங்களில் சவுக்கு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவாக, 'வெற்றி' அமைப்பு சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் துவங்கப்பட்டது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில், 18 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 500க்கும் மேற்பட்ட குறுங்காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டு, 10வது திட்டத்தின் கீழ், 3 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, ஒரு லட்சத்து, 60 ஆயிரத்து, 657 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
இதில், மாவட்டத்திலேயே, உடுமலை பகுதிகளில் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், ஒரு லட்சத்து, 1,296 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவ மழை காலத்தில் இலக்கை எட்டும் வகையில், பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், இந்திய வன மரபியல் ஆராய்ச்சி மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் உருவாக்கிய வீரிய ரக சவுக்கு மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.
குடிமங்கலம் ஒன்றியம், பெதப்பம்பட்டி, லிங்கமநாயக்கன்புதுார், சித்ரா கிரிராஜ், 20 ஏக்கர் நிலத்தில் சவுக்கு மரக்கன்றுகள் நடவு செய்து, 3 ஆண்டில், 40 லட்சம் ரூபாய் வருவாய் பெற்றார்.
இதனால், பசுமை வளர்ப்பு மற்றும் வருவாய் அடிப்படையில், சவுக்கு மரக்கன்றுகள் நடவு செய்வதிலும், உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெதப்பம்பட்டி, சிந்திலுப்பு அருகேயுள்ள ஆலாமரத்துாரைச்சேர்ந்த, விவசாயி ரேணுகா தோட்டத்தில், 4,500 சவுக்கு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல், திருமூர்த்திமலை ராஜா சந்திரசேகருக்கு சொந்தமான நிலத்தில், 1,440 சவுக்கு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில், இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்ய விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்டக்குழுவினர் தெரிவித்தனர்.