/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தந்த நம்பிக்கை மாற்றுப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தந்த நம்பிக்கை மாற்றுப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தந்த நம்பிக்கை மாற்றுப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தந்த நம்பிக்கை மாற்றுப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜன 12, 2025 02:08 AM

திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் தந்த நம்பிக்கையால், மானாவாரி நிலங்களில் கூட மாற்றுப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட துவங்கியுள்ளனர்.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்களின், 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டம், 1,916 கோடி ரூபாயில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை ஆதாரமாக கொண்ட மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில், காலிங்கராயன் அணைக்கட்டில், உபரியாக வெளியேறும் நீர், அத்திக்கடவு திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், மூன்று மாவட்டங்களில் நுாற்றுக்கணக்கான கிராமங்களில் உள்ள, 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதன் வாயிலாக, '24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்' என, கணக்கிடப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பருவமழையால், திட்டத்தின் கீழ், குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டும் பணியும் தடையின்றி நடந்தது.
வேளாண் துறை அலுவலர்கள் கூறியதாவது:
இத்திட்டத்தால், பல இடங்களில் பல ஆண்டுகளாக காய்ந்து, வறண்டு கிடந்த குளம், குட்டைகளில் கூட நீர் செறிவூட்டப்படுகிறது.
உதாரணமாக அவிநாசி கருவலுார், முறியாண்டம்பாளையம், கானுார் உள்ளிட்ட வானம் பார்த்த பூமி நிறைந்த பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரத்துவங்கியிருக்கிறது; இதனால், விவசாயமும் செழிக்க துவங்கியிருக்கிறது.
பொதுவாக, கோடையில் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்துக்கு சரியும்; மழைக்காலங்களில் ஓரளவு உயரும். எனவே, மானாவாரி பயிர் சாகுபடியில் தான் விவசாயிகள் ஆர்வம் காட்டி வந்தனர்.
ஆனால், அத்திக்கடவு திட்டத்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதை விவசாயிகள் உணர்கின்றனர். எனவே, 'தண்ணீர் பிரச்னையால் விவசாயம் பாதிக்காது' என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதனால் நிலக்கடலை, சோளம் என மானாவாரி பயிர் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள், வாழை, மக்காச்சோளம், நெல், மஞ்சள் போன்ற மாற்றுப்பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
அவிநாசி, தொட்டகளம்புதுாரைச் சேர்ந்த விவசாயி கோபால்சாமி கூறுகையில், ''எனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டிருந்தேன்; நான்காண்டு இடைவெளிக்கு பின், துாயமணி நெல் பயிரிட துவங்கியிருக்கிறேன்.
என தோட்டத்தில் இருந்து, அரை கி.மீ., சுற்றி அத்திக்கடவு திட்ட குளம், குட்டைகள் உள்ளன; அவற்றில் நீர் செறிவூட்டப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் உயரும்; இதனால், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது,'' என்றார்.