/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பந்தல் காய்கறி உற்பத்திக்கு விவசாயிகள் ஆர்வம்
/
பந்தல் காய்கறி உற்பத்திக்கு விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஆக 29, 2025 09:39 PM
உடுமலை, ; பருவமழைக்குப்பிறகு, பந்தல் காய்கறி சாகுபடியில், உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளனர்.
உடுமலை பகுதியில், விளைநிலங்களில், பந்தல் அமைத்து, பீர்க்கன், புடலை, சுரைக்காய், பாகற்காய் உள்ளிட்ட சாகுபடிகளில், விவசாயிகள் ஈடுபடுகின்றனர். தென்மேற்கு பருவமழை சீசனில், அதிக மழைப்பொழிவால், செடிகளில் பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்பட்டது.
இதனால், பூக்கள் உதிர்ந்ததுடன், தரமான காய்களும் உற்பத்தியாகவில்லை. போதிய விலையும் கிடைக்கவில்லை. பருவமழைக்கு பிறகு இடைவெளி விட்டு தற்போது, பந்தல் காய்கறி சாகுபடியை மீண்டும் துவக்கியுள்ளனர்.
வளர்ச்சி தருணத்தில், கோடை வெப்பம் உள்ளிட்ட காரணங்களால், செடிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம். எனவே, நிலப்போர்வை முறையை பின்பற்றி, சுரைக்காய் உள்ளிட்ட நாற்றுகளை நடவு செய்துள்ளனர்.
இம்முறையில், மேட்டுப்பாத்தி அமைத்து, அதன் மேல், ஷீட் பரப்புகின்றனர். அந்த ஷீட்டில் செடிகளுக்கு போதிய இடைவெளி விட்டு, துளைகள் விடப்பட்டிருக்கும்.
அங்கு நாற்றுகளை நடவு செய்து, செடிக்கு அருகிலேயே தண்ணீர் கிடைக்கும் வகையில், நுண்ணீர் பாசன குழாய்களை அமைக்கின்றனர்.
இதனால், தண்ணீர் வெகுவாக மிச்சப்படுத்தப்படுவதுடன், கோடை வெயிலால் செடிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது; களைகளையும் கட்டுப்படுத்தலாம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.