/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் சந்தை அமைக்கும் திட்டம் இழுபறியால் வேதனை
/
உழவர் சந்தை அமைக்கும் திட்டம் இழுபறியால் வேதனை
ADDED : டிச 24, 2024 10:18 PM
உடுமலை; மடத்துக்குளம் தாலுகாவில், உழவர் சந்தை அமைக்கும் திட்டம் இழுபறியாகி வருவதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
மடத்துக்குளம் பகுதிகளில், அமராவதி, பி.ஏ.பி., மற்றும் இறவை பாசனத்தில், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, பீட்ரூட் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் உழவர் சந்தையில் விற்பனை செய்ய உடுமலை உழவர் சந்தைக்கு வர வேண்டியுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்திற்கு, ஒரே உழவர் சந்தையாக உள்ளதால், விவசாயிகளுக்கு போதிய இட வசதியில்லை.
மடத்துக்குளம் தாலுகாவாக உருவாக்கப்பட்டு, 15 ஆண்டுகளான நிலையில், உழவர் சந்தை அமைக்க வேண்டும், இப்பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என விவசாயிகள் தரப்பில் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து விவசாயிகள் மனு அடிப்படையில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், பேரூராட்சி அளவிலான புதிய உழவர் சந்தை உருவாக்கும் திட்டத்தில், மடத்துக்குளத்தில் புதிய உழவர் சந்தைகள் அமைக்க நுகர்வோர் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, அரசுக்கு திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மடத்துக்குளத்தில் உழவர் சந்தை அமைக்கும் திட்டம் இழுபறியாகி வருவதால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.