/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெருநாய் விவகாரம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
தெருநாய் விவகாரம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 28, 2025 10:56 PM
- நமது நிருபர் -
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், கால்நடைகளை கடித்து குதறும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்தக்கோரி, இரண்டு மாவட்ட விவசாயிகள் இணைந்து, திருப்பூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி பேசியதாவது: விவசாயிகளின் தொடர் போராட்டங்களையடுத்து, பலியான கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ஆடுகளுக்கு ஆறாயிரம் ரூபாயும், கோழிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கிவிட்டு நிறுத்திவிட்டனர். திருப்பூர் மாவட்டத்தில், இதுவரை 1,500 ஆடுகள், தெருநாய் கடிக்கு பலியாகியுள்ளன. ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டியநிலையில், விவசாயிகளுக்கு, வெறும் 15 லட்சம் ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு, 2024, ஏப். 1 முதல் நிலுவையில் உள்ள இழப்பீட்டு தொகைகளை உடனடியாக வழங்கவேண்டும்.
தெருநாய் கடித்து இறந்த கோழிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய்; ஆடுகளுக்கு 25 ஆயிரம்; எருமை மாடு, மாடுகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு தொகை நிர்ணயிக்கவேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு படி, கொடூரமான நாய்களை, அதாவது கால்நடைகளை கடித்து குதறும் நாய்களை, உள்ளாட்சி நிர்வாகங்கள் உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.