/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நோய் தாக்குதலிலிருந்து தென்னையை பாதுகாக்க கவனம் செலுத்துங்க! மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை
/
நோய் தாக்குதலிலிருந்து தென்னையை பாதுகாக்க கவனம் செலுத்துங்க! மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை
நோய் தாக்குதலிலிருந்து தென்னையை பாதுகாக்க கவனம் செலுத்துங்க! மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை
நோய் தாக்குதலிலிருந்து தென்னையை பாதுகாக்க கவனம் செலுத்துங்க! மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை
ADDED : பிப் 06, 2025 08:56 PM

உடுமலை: உடுமலை பகுதிகளில், நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தென்னை சாகுபடி தொடர்ந்து பாதித்து வருகிறது. இதனால், மகசூல் குறைந்து, தேங்காய் மற்றும் கொப்பரை விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது. தென்னை விவசாயத்தை காக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், ஏறத்தாழ, 1.30 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நோய் தாக்குதல் காரணமாக, விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.
அடுத்தடுத்த தாக்குதல்
தென்னையில், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் அதிகளவு காணப்படுவதோடு, காண்டாமிருக வண்டு தாக்குதல், தஞ்சாவூர் வாடல் நோய், கேரளா வாடல் நோய், சிலந்தி பூச்சி தாக்குதல் கருந்தளை புழு தாக்குதல், பென்சில் முனை தாக்குதல் நோய் என தென்னையை அடுத்தடுத்து நோய்கள் தாக்கி வருகிறது.
ஒரு காலத்தில் பராமரிப்பு செலவு குறைவு, அதிக வருவாய் என்ற அடிப்படையில், தென்னை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள், பல ஆண்டு பயிரான தென்னையை தொடர்ந்து பராமரிக்க முடியாமலும், அழிக்கவும் முடியாமலும், நோய் தாக்குதலுக்கு பல்வேறு மருந்துகள் அடித்தும், பல வழிமுறைகளை பின்பற்றியும் பயனில்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எகிறும் விலை
ஒரு ஏக்கருக்கு, 70 தென்னை மரங்கள் வரை சாகுபடி செய்ய முடியும், சராசரியாக, ஒரு தென்னையிலிருந்து, ஆண்டுக்கு, 500 கிராம் எடையுள்ள, 100 காய்கள் வரை மகசூல் இருக்கும். தற்போது, நோய் தாக்குதல் காரணமாக, 200 கிராம் என்ற அளவில் காய்கள் சிறியதாக மாறியுள்ளதோடு, மகசூல், 30 காய்கள் வரை மட்டுமே கிடைத்து வருகிறது.
இவ்வாறு, ஏக்கருக்கு, 4 டன் வரை மகசூல் இருக்கும் நிலையில், தற்போது, 1.5 முதல், 2 டன் வரை மட்டுமே மகசூல் கிடைக்கிறது.
தென்னை சாகுபடி பெருமளவு பாதித்த நிலையில், தற்போது விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஒரு டன் தேங்காய், 36 ஆயிரம் வரை மட்டுமே இருந்த நிலையில், தற்போது, 60 ஆயிரம் முதல், 65 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. அதே போல், கடந்தாண்டு கொப்பரை ஒரு கிலோ, ரூ.85 வரை மட்டுமே விற்ற நிலையில், தற்போது, 145 வரை உயர்ந்துள்ளது.
விலை உயர்ந்தாலும், விவசாயிகளுக்கு பயனில்லை. இதனால், தேங்காய், தேங்காய் எண்ணெய் விலைகள் உயர்ந்து, பொதுமக்கள் பாதித்து வருகின்றனர்.
ஆய்வு செய்யணும்
மத்திய, மாநில அரசுகள் தென்னை வளர்ச்சி வாரியம், வேளாண் பல்கலை ஆராய்ச்சி மற்றும் வட்டாரம் தோறும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள் என இருந்தாலும், தென்னையை அடுத்தடுத்தும், ஒரே சமயத்திலும் தாக்கி வரும், நோய்களுக்கு தீர்வு காண முடியாத நிலையே உள்ளது.
இப்பகுதிகளில், தொடர் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலையில், விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் குழுவை அமைத்து, முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
தீர்வு காண தேவையான மருந்துகள், உரங்களை விவசாயிகளுக்கு வழங்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தொழில்நுட்ப ஆலோசனை
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில தலைவர் மதுசூதனன் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகள் தென்னை விவசாயத்தை காக்கும் வகையில், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மரத்தை காப்பாற்ற தடைசெய்யப்பட்ட ரசாயன மருந்துகளை விவசாயிகள் வாங்கி தெளிப்பதால், இயற்கையாக உள்ள பூச்சிகளும் அழிந்து, தற்போது பல்வேறாக நோய் பரவிவருகின்றன.
தடை செய்யப்பட்ட ரசாயன மருந்துகளை தடை செய்யவும், விஞ்ஞானிகள், தோட்டக்கலை அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழு அமைத்து, தென்னையை தாக்கும் நோய்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து, அதற்கான தீர்வுகளை கண்டறிய வேண்டும்.
விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்ப ஆலோசனைகள் மட்டுமின்றி, இடுபொருட்களையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தார்.