/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைகேட்பு கூட்டத்தில் கொட்டித் தீர்த்த விவசாயிகள்
/
குறைகேட்பு கூட்டத்தில் கொட்டித் தீர்த்த விவசாயிகள்
குறைகேட்பு கூட்டத்தில் கொட்டித் தீர்த்த விவசாயிகள்
குறைகேட்பு கூட்டத்தில் கொட்டித் தீர்த்த விவசாயிகள்
ADDED : ஜூலை 25, 2025 11:33 PM

திருப்பூர்; குறைகேட்பு கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், கலெக்டர் முன்னிலையில், வேளாண் சார்ந்த பிரச்னைகளை கொட்டித் தீர்த்தனர்.
திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ், வேளாண் இணை இயக்குனர் சுந்தர வடிவேலு மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் திரளாக பங்கேற்று, மனு அளித்தனர். பிரச்னைகளை சுட்டிக்காட்டி, கலெக்டர் முன்னிலையில் பேசினர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கொ.ப.செ., பரமசிவம்:
தாராபுரம், கொளத்துப்பாளையத்தில், சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். இனாம் நிலங்களை, கோவிலுக்கு சொந்தமானது என கூறி, ஹிந்து அறநிலையத்துறை கைப்பற்றி வருகிறது.
இனாம் நிலைங்களை பூஜ்ஜிய மதிப்பு செய்துள்ளதால், நிலம் மீது அடமான கடன் பெறமுடியாமலும், விற்பனை செய்வது உள்ளிட்ட எவ்வித செயல்பாடுகளும் மேற்கொள்ளமுடியாமல், விவசாயிகள் தவிக்கின்றனர். தற்போது, எவ்வித முன்னறிவிப்பும், நோட்டீஸ் வழங்காமல், இனாம் நிலங்களில் கல் நட்டு வைக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிடவேண்டும்.
பெட்ரோலிய நிறுவனம், கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை, காஸ் குழாய் அமைத்து வருகிறது.
கோவை மாவட்டத்தின் இருகூர் முதல் திருப்பூர் மாவட்டம் முத்துார் வரை 70 கி.மீ., துாரத்துக்கு மட்டும், விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதிக்கப்பட்டு வருகிறது.
பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் நகரங்களில் புறவழிச்சாலை அமைக்க, நெடுஞ்சாலைத்துறை விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. எனவே, காஸ் குழாயை, புறவழிச்சாலை வழியாக கொண்டு செல்லும் வகையில் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும், என்றார்.
பதிலளித்த கலெக்டர், ''இனாம் நிலம் பிரச்னை, நமது மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. விவசாயிகளின் தொடர் கோரிக்கைகள் தொடர்பாக, அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. காஸ் குழாய்களை மாற்றுப்பாதையில் கொண்டு செல்வது தொடர்பாக, எண்ணெய் நிறுவனத்துடன் ஆலோசிக்கப்படும்,'' என்றார்.
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து:
குண்டடம், தாராபுரம் பகுதிகளில் பட்டு உற்பத்தி அதிகம் நடக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு, பட்டு வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்பட்ட மானியத்தில், பட்டு உற்பத்தி துவங்கப்பட்டது. பட்டு வளர்ச்சித்துறை சார்பில், விவசாயிகளுக்கு தரமற்ற முட்டைகள் வழங்கப்படுகிறது.
தரமான முட்டைகள் வழங்கும்போது, 100 முட்டைக்கு, 75 கிலோ அளவு வரை பட்டுக்கூடு உற்பத்தியானது. தரமற்ற முட்டைகளால் தற்போது, வெறும் 15 கிலோ கூடு மட்டுமே உற்பத்தியாவதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். தரமான முட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலங்கியம் பழனிசாமி:
அமராவதி பழைய ஆயக்கட்டில், அலங்கியம், தளவாய்பட்டணம், தாராபுரம், கொழிஞ்சிவாடி பாசன வாய்க்கால் உள்ளது. தாராபுரம் வாய்க்காலில், நகராட்சி பகுதிகளின் சாக்கடை கழிவுநீர் கொண்டுவிடப்படுகிறது. மருத்து கழிவுகள் கொட்டப்படுகின்றன. நகராட்சி நிர்வாகம், சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க வேண்டும், என்றார்.
பா.ஜ., விவசாய அணி பிரதிநிதி மவுனகுருசாமி:
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், விவசாய பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க கேட்டு, நான்கு குறைகேட்பு கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இன்னும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 6.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உடுமலை வாரச்சந்தை கட்டுமான பணி ஆறு ஆண்டுகளாகியும் முடிக்கப்படவில்லை. பி.ஏ.பி., வாய்க்காலில் கோழி கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
'குடிமங்கலம், மடத்துக்குளம், உடுமலை, தாராபுரம் பகுதிகளில், நுாறுநாள் வேலை திட்டத்தில், 172 பணிகள் மேற்கொள்ள பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் பதிலளித்தார்.
இவ்வாறு, விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் பிரச்னைகளை குறிப்பிட்டு பேசினர்.