/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொத்துக்கொத்தாக ஆடுகளை பறிகொடுக்கும் விவசாயிகள்
/
கொத்துக்கொத்தாக ஆடுகளை பறிகொடுக்கும் விவசாயிகள்
ADDED : டிச 08, 2024 02:45 AM

திருப்பூர்: காங்கயம், வெள்ளகோவில் பகுதியில் நாய்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது; இரவு நேரங்களில் மட்டுமே, ஆடுகளை தாக்கிய நாய்கள், தற்போது பகல் நேரங்களிலும் தாக்க துவங்கியிருப்பது, விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
காங்கயம், வெள்ளகோவில் சுற்றுப்பகுதிகளில் சில மாதங்களாக தெரு நாய்களின் இனப்பெருக்கும் அளவுக்கதிகமாக பெருகியிருக்கிறது. அவை விவசாயிகளின் தோட்டம், பட்டிகளில் அடைபட்டுள்ள அடுகளை தெருநாய்கள் கடித்து விடுகின்றன; இதனால், ஆடுகள் இறந்துவிடுகின்றன.
நேற்று முன்தினம், திருப்பூர், காங்கயம், சிவன்மலை அரசம்பாளையம் பகுதியில் வசிக்கும் ராமசாமி, என்பவரது தோட்டத்துக்குள் புகுந்த தெரு நாய்கள், 3 குட்டி, 11 செம்மறியாடுகளை கடித்ததால், அவை இறந்தன.
அவர்கள் கூறியதாவது:
தெருநாய்கள் அதிகரித்து விட்டன; அவற்றை கட்டுப்படுத்துவதாக கூறும் உள்ளாட்சி நிர்வாகத்தினர், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாக தெரிய வில்லை. முன்பெல்லாம் இரவில் தான் நாய்கள், ஆடுகளை கடித்தன; தற்போது, மதியம், மாலை நேரங்களிலும் கடிக்கின்றன.
நாய்களை கட்டுப்படுத்தவே முடியாது என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. இறந்த ஆடுகளுக்கு பிரேத பரிசோதனை அறிக்கையை வாங்கி வைத்துக் கொண்டே இருக்கிறோம். இழப்பீடு வழங்கப்படாதபோது, கால்நடை வளர்ப்பு தொழிலையே கைவிடும் சூழல் தான் ஏற்படும்.
'இறந்த ஆடுகளுக்கு, 45 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, நவ., 24ல் வருவாய்த்துறையினர் உறுதியளித்துள்ளனர். அறிவித்தவாறு இழப்பீடு வழங்கப்படாவிட்டால், விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தீயாய்த் தகிக்கும் விவசாயிகள்
விசுவாசம் உள்ள வீட்டு விலங்குகளில் முதன்மையானது நாய். நன்றிக்கு எடுத்துக்காட்டாக நாய்க்கு இணையாக எந்த விலங்கையும் ஒப்பிடவே முடியாது. கடந்த தலைமுறை வரை ஆடுகளை நரிக்கு பலி கொடுக்காத விவசாயிகளே இல்லை எனலாம்.
நவீன மயமாக்கல், மக்கள் தொகை பெருக்கம் போன்றவற்றால் நரிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. தொன்று தொட்டு ஆடுகளை நரிகளிடமிருந்து பாதுகாத்ததே நாய்கள் தான். ஆனால், அப்படிப்பட்ட நாய்களிடமிருந்தே இது போன்ற பெரும் தொல்லை ஆரம்பிக்கும் என்று விவசாயிகளே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
'' மாவட்டம் முழுவதும் வெறிபிடித்து அலையும் பிடித்து விட்டால் வெறிநாய் தொல்லை இருக்காது. ஆனால், தமிழக அரசு இதில் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை'' என்ற மனக்குறை விவசாயிகள் மத்தியில் தீயாய் தகிக்கிறது.