/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'போர்வெல்' போட்டே கடனாளியாகும் விவசாயிகள்
/
'போர்வெல்' போட்டே கடனாளியாகும் விவசாயிகள்
ADDED : ஜூலை 08, 2025 09:54 PM
- நமது நிருபர் -
பி.ஏ.பி., மூன்று மண்டலமாக இருந்த போது, திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் செழிப்பாக நடந்தது. திருப்பூர் வளர்ந்த போது ஆட்கள் பிரச்னை தலை துாக்கியது. இதனால், விவசாயிகள் தென்னை சாகுபடிக்கு மாறத் துவங்கினர்.
அதன்பின் புதிய கால்வாய்கள் வெட்டப்பட்டு ஒரு லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பு விஸ்தரிக்கப்பட்டது. நீர் ஆதாரங்களான ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் போன்றவற்றை செயல்படுத்தாமல், இருக்கும் தண்ணீரை பகிர்ந்து அளிக்க அரசு முடிவு எடுத்தது.
இதனால் மூன்று மண்டலமாக இருந்தது நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டது. இதற்கு முன், ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏழு நாள் விட்டு ஏழு நாள் பாசனம் நான்கரை மாதம் வழங்கப்பட்டது. தற்போது மாதத்துக்கு ஒரு வாரம் என நான்கு ஐந்து சுற்றுகளுடன் பாசனம் முடிந்து விடுகிறது. அடுத்து தண்ணீர் திறக்க இரண்டு ஆண்டு ஆகிறது.  தண்ணீர் இன்றி தென்னை கருகிவிட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிடுகிறது.
தென்னையை காப்பாற்ற  விவசாயிகள் போராடி வருகின்றனர்.  முன்பெல்லாம், 500, 600 அடி போர்வெல் அமைத்தாலே அது  பெரிய விஷயம். தற்பொழுது அளவுக்கு அதிகமாக தண்ணீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் வற்றி விட்டது. தற்பொழுதெல்லாம், 1,500 அடி போர்வெல் அமைப்பது சாதாரணமாகி விட்டது.
இதற்கு விவசாயிகள் பத்து முதல், 15 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கின்றனர். பணத்துக்காக வட்டிக்கு வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் சமாளிக்கின்றனர். இவ்வாறாவே, விவசாயிகள் கடனாளியாகி வருகின்றனர்.

