/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொட்டியவர் இடத்திலேயே கழிவை கொட்டிய விவசாயிகள்
/
கொட்டியவர் இடத்திலேயே கழிவை கொட்டிய விவசாயிகள்
ADDED : பிப் 02, 2025 01:12 AM

பல்லடம்: பல்லடம் அருகே கோடங்கிபாளையம் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான பயன்பாடற்ற பாறைக்குழி உள்ளது. இதில், தொழிற்சாலை காஸ்டிங் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. நிலத்தடி நீரை கெடுக்கும் காஸ்டிங் கழிவுகளை பாறைக்குழிக்குள் கொட்டக்கூடாது என, அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நில உரிமையாளரிடம் வலியுறுத்தினர்.
இருப்பினும், கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாரிடம் விவசாயிகள் புகார் அளித்தனர். 'பாறைக்குழியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை, நில உரிமையாளரே அவரது சொந்த பொறுப்பில் அகற்ற வேண்டும். இல்லாவிடில், நாங்களே அள்ளி, நில உரிமையாளரின் இடத்தில் கொட்டி விடுவோம்' என, விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
நேற்று காலை, பாறைக்குழியில் இருந்த கழிவுகளை அள்ளி எடுத்து, நில உரிமையாளரின் இடத்தில் விவசாயிகள் கொட்டினர். இதனால், நில உரிமையாளருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பல்லடம் போலீசார், இருதரப்பினரையும் விசாரணைக்காக ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது: கோடங்கிபாளையம் சுற்றுவட்டார பகுதியில், பி.ஏ.பி., பாசன வசதி கிடையாது. நிலத்தடி நீரை பயன்படுத்தி தான் விவசாயம் நடக்கிறது. இருக்கின்ற நீரையும் கெடுத்துவிட்டால், எவ்வாறு விவசாயம் செய்வது. மழைநீருடன் காஸ்டிங் கழிவுகள் கலந்தால் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றிக் கொள்ள அதன் உரிமையாளருக்கு அவகாசம் கொடுத்தோம். கழிவுகள் அகற்றப்படாததால், நாங்களே அவற்றை அள்ளி எடுத்து வந்து அவரது இடத்தில் கொட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் இரண்டு நாட்களுக்குள் மொத்த கழிவுகளை அவரே அகற்றிக் கொள்ளாவிட்டால், அனைத்து கழிவுகளையும் அள்ளி எடுத்து வந்து அவரது நிலத்தில் கட்டாயம் கொட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.