/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உழவரை தேடி' முகாமில் ஆலோசனை வழங்கிய விவசாயிகள்
/
'உழவரை தேடி' முகாமில் ஆலோசனை வழங்கிய விவசாயிகள்
ADDED : ஜூலை 13, 2025 12:29 AM
தமிழகம் முழுவதும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் உழவரை தேடி வேளாண்மை என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு துவங்கியுள்ளது. வேளாண்துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள கிராமங்களில் ஒன்றிய அளவில் முதல் கட்டமாக இத்திட்டத்தின் வாயிலாக முகாம் நடத்தப்படுகிறது. இதனை கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தில், 17,116 கிராமங்கள் பயனடையும் விதமாக நடத்தப்படவுள்ளது.
முகாமில் வேளாண் விரிவாக்க சேவைகள், அரசு திட்டங்கள் ஆகியன நேரடியாக விவசாயிகளுக்கு அவர்கள் ஊரிலேயே வழங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் இம்முகாம் இரண்டாவது மாதமாக தற்போது நடைபெற்று வருகிறது. வேளாண் விரிவாக்க மையங்களின் சேவைகளும், அரசு திட்டங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இதில் பங்கேற்கும் விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளையும், துறை அதிகாரிகளுக்கு அளித்து வருகின்றனர்.
விவசாயிகள் தரப்பில் வேளாண் துறையினருக்கு அளித்த ஆலோசனை மற்றும் கோரிக்கை:
l சொட்டு நீர்ப் பாசனத்துக்கான மானியத்தை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இதனால், முறைகேடுகள் தவிர்க்கப்படும்.
l திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் கால்நடைகள் வளர்ப்பில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக தெரு நாய்கள் உள்ளன. இதனால், கடந்த காலங்களில், 200 கால்நடைகள் வெறி நாய்களுக்கு பலியாகி விட்டன. இதற்கு தீர்வு காண, சுழற்சி முறையில் மாதம் தோறும் கால்நடை பராமரிப்பு மருந்தகங்களில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடத்த வேண்டும்.
l விவசாயிகளுக்கு வேளாண்துறை, பட்டு வளர்ச்சித் துறை, உழவர் நலத்துறை ஆகியன வழங்கும் மானியத் தொகையை, ஆண்டுதோறும் விலைவாசி உயர்வு அடிப்படையில் உயர்த்தி வழங்க வேண்டும்.
l விவசாயிகளுக்கு வருவாய்த் துறையினர் நடவடிக்கை பல நேரங்களில் பெரும் இடையூறை ஏற்படுத்துகிறது. வருவாய்த் துறை ஆவணங்களில் சம்பந்தமில்லாத நபர்களின் பெயர்களை இணைத்து விடுகின்றனர். அதை நீக்கம் செய்வதற்குள் விவசாயிகள் தங்கள் வாழ்நாளையே இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போல் சம்பந்தமில்லாத நபர்களின் பெயர்களை நீக்கம் செய்ய, விவசாயிகள் வைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் அதை மேற்கொள்ள அனைத்து பகுதியிலும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
l பல்வேறு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் அதன் சேவைகள் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.
l விவசாயிகள் பயிர்க்கடன் பெற சிபில் ஸ்கோர் கணக்கீடு தேவை என்பதை ரத்து செய்ய வேண்டும். நீர் தேக்க தொட்டி அமைக்க வழங்கும் மானியத்தை எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து வழங்க வேண்டும்.
l விவசாய பணிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் விதைகள் உரிய காலத்தில், தரமான விதைகள் வழங்க வேண்டும். அதே போல் உர வகைகளும் தட்டுப்பாடின்றியும், தாமதமின்றியும் வழங்கப்பட வேண்டும். உரிய விற்பனை சங்கங்கள் அதை உரிய அளவில் இருப்பு வைக்க வேண்டும்.
மாவட்ட அளவில் அதிகாரிகள் இதை உறுதி செய்ய வேண்டும்.