/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
களைக் கொல்லிகளை நம்பும் விவசாயிகள்
/
களைக் கொல்லிகளை நம்பும் விவசாயிகள்
ADDED : ஜன 10, 2025 04:22 AM
பொங்கலுார்; பயிர் சாகுபடி செய்யும் நிலங்களில் களைகள் வளர்வது இயற்கை. பயிர் வளர துவங்கும் தருவாயில் களை எடுத்தால் மட்டுமே பயிர் வளர்ச்சி அதிகரிக்கும்.  இல்லாவிட்டால் முதன்மை பயிரை பின்னுக்குத் தள்ளி களைச்செடிகள் அதீத வளர்ச்சி பெற்று உற்பத்தியை குறைத்து விடும்.
விவசாயிகள் காலங்காலமாக களையெடுப்பு பணியை ஆட்களை வைத்து மேற்கொண்டு வந்தனர். முன்பெல்லாம் விவசாயத்தில் குறைந்த அளவு கூலி வழங்கப்பட்டு வந்தது. சமீப காலங்களில் கிராமப்புறங்களில் நகரங்களுக்கு இணையாக கூலி உயர்ந்து விட்டது. கொளுத்தும் வெயிலில் பணி செய்ய வேண்டும் என்பதால் குறித்த நேரத்தில் கூலி ஆட்களும் கிடைப்பதில்லை. பெரும்பாலான விவசாயிகள் களையெடுப்பு பணிக்கு கூலி ஆட்களை வேலைக்கு அமர்த்துவதை தவிர்த்து வருகின்றனர்.
பயிர் சாகுபடி செய்வதற்கு முன் களைக்கொல்லி தெளிக்கின்றனர். அதில் பெரும்பாலான புல், பூண்டு வகைகள் காய்ந்து விடுகின்றன. சாகுபடி செய்த பின் மற்றொரு களைக்கொல்லியை பயன்படுத்துகின்றனர். இதில் கருவில் இருக்கும் தாவரங்களும் கருகி விடுகின்றன. முதன்மை பயிரை தப்பிக்க வைக்கும் அளவுக்கு களைக்கொல்லிகள் வந்து விட்டன.  விவசாயிகள் களைக்கொல்லிக்கு மாறிவிட்டதால், பயிர் சாகுபடி களைக்கொல்லிகளை மட்டுமே நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இயற்கை முறை விவசாயிகள் சிலர் கூறியதாவது:
தென்னை, வாழை, வெங்காயம், தக்காளி, மக்காச்சோளம் என அனைத்திற்கும் களைக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது.  லாபமின்மை காரணமாக இயற்கை விவசாயம் செய்வோர் எண்ணிக்கை விரல் வெட்டு எண்ணும் அளவிலேயே உள்ளது.
களை எடுக்க களைக்கொல்லி,  பூச்சிகளை அழிக்க பூச்சிக்கொல்லி, பயிர் வளர்ச்சிக்கு செயற்கை உரம் பயன் படுத்துவதால் நீர் வளமும், நிலவளமும் கெட்டு விட்டது.
இதனால் கேன்சர், பிரஷர், சுகர் போன்ற நோய்களின் தீவிரத்தால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
விரைவில் நிலம் மலட்டுத்தன்மையை அடைந்து விடும். இது எதிர்காலத்தில் உணவு பஞ்சத்தையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

