/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுதலாக நீர் கிடைத்தால் விவசாயிகள் மனம் குளிரும்
/
கூடுதலாக நீர் கிடைத்தால் விவசாயிகள் மனம் குளிரும்
ADDED : அக் 22, 2024 12:10 AM

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து மனு அளித்த தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவருவதையடுத்து, பி.ஏ.பி., தொகுப்பணைகளில் தண்ணீர் நிரம்பிவருகிறது. தாராபுரம் உப்பாறு அணைக்கு உயிர் நீர் வழங்கவேண்டும் என, கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தோம். டிசம்பரில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பி.ஏ.பி., திட்டக்குழுவில் முடிவு செய்யப்பட்டு, உப்பாறு அணைக்கு ஐந்து நாட்கள் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அரசூர் ஷட்டரிலிருந்து உப்பாறு அணை வரையிலான 43 கி.மீ., துாரத்தில், 18 தடுப்பணைகள் உள்ளன.
திறக்கப்படும் தண்ணீர் தடுப்பணைகளிலேயே நின்றுவிடும். அதனால், உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பது பயனற்றதாகிவிடும். பி.ஏ.பி., பாசன பகுதி களில் நல்ல மழை பெய்துள்ளது. கூடுதலாக பத்து நாட்கள் தண்ணீர் திறந்து, உப்பாறு அணையை நிரப்பவேண்டும்.
உப்பாறு பாசன விவசாயிகளுக்கு வேறு நீராதாரம் ஏதுமில்லை. பி.ஏ.பி., தொகுப்பில் திறக்கப்படும் தண்ணீரையே நம்பியுள்ளோம். அணை நிரம்பினால், ஓராண்டுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணறுகளில் நீர் மட்டம் உயரும். எங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி வைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. இல்லையென்றால், உப்பாறு பாசன விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.
தண்ணீர் கிடைத்தால், 'சூரியகாந்தி சக்கரம்' பட்டாசு போல், மகிழ்ச்சியில் சுழலும் விவசாயிகள் மனசு.

