UPDATED : நவ 14, 2026 09:30 PM
ADDED : நவ 14, 2026 09:26 PM

பல்லடம்: பல்லடம் அருகே, கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்துள்ளதால், மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோடங்கிபாளையம் ஊராட்சி, காரணம்பேட்டை ஸ்ரீகருடா கார்டன் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியின் குடிநீர்த் தேவைக்காக, ரூ.3 லட்சம் செலவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டது முதல் இன்றுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை.
அப்பகுதி மக்கள் கூறுகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொட்டி, பயன்பாட்டுக்கு வராமலேயே சேதமடைந்துள்ளது. இதைச் சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்யக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. சமீபத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள், தொட்டியில் தண்ணீர் ஏற்றும் அளவுக்கு உறுதித்தன்மை இல்லை என்றும், மாற்று ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தனர்.
மூன்றே ஆண்டுகளில் தொட்டி பழுதடைந்தது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள மக்கள், தற்போது குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருவதாகக் கூறினர். எனவே, சேதமடைந்த தொட்டியை அகற்றி, புதிய தொட்டி அமைத்து குடிநீர் வழங்குவதுடன், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
