/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை விரிவாக்கத்தில் மரங்களை காப்பாற்ற 'களம்'
/
சாலை விரிவாக்கத்தில் மரங்களை காப்பாற்ற 'களம்'
ADDED : ஜன 20, 2025 11:40 PM
அவிநாசி; அவிநாசி ஆட்டையாம்பாளையம் - மேட்டுப்பாளையம் இடைப்பட்ட நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி துவங்கியுள்ளது. சாலை விரிவாக்கத்துக்காக சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள மரங்களை வெட்டுவது என, நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டு, பணிகளை துவக்கியுள்ளனர்.
அவிநாசி 'களம்' அறக்கட்டளை நிறுவனர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனுவில், 'மாவட்ட எல்லையில் அவிநாசி முதல், கஞ்சப்பள்ளி வரை, 477 மரங்கள் வெட்டப்பட இருந்தது. தேவையற்ற மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். மீண்டும் ஒரு முறை, மறு சர்வே செய்து, விரிவாக்கத்துக்கு இடையூறாக உள்ள மரங்களை மட்டும் வெட்ட வேண்டும்,' என கூறியிருந்தனர்.
மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, சதீஷ்குமார் கூறுகையில், ''கலெக்டரிடம் வழங்கிய மனு அடிப்படையில், சாலை விரிவாக்கம் தொடர்பாக மறுசர்வே மேற்கொள்ளப்பட்டதில், 477 மரங்கள் வெட்டப்பட இருந்த நிலையில், 200 மரங்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. ஆட்டையாம்பாளையம் - மேட்டுப்பாளையம் இடைபட்ட சாலையில், 1,560 மரங்களை வெட்ட உத்தரவிட்டுள்ளனர்; இதில், தேவையற்ற இடங்களில் வெட்டப்படும் மரங்களை காப்பாற்ற தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம்''.
இவ்வாறு, அவர் கூறினார்.