ADDED : நவ 03, 2025 11:51 PM
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள், சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மொத்தமுள்ள 2,536 ஓட்டுச்சாவடிகளுக்கும், பி.எல்.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, தீவிர திருத்தம் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு வழங்க, திருத்த படிவம் அச்சிடப்பட்டு, அந்தந்த சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பி.எல்.ஓ.,க்கள் இன்று முதல், வாக்காளர்களின் வீடு தேடிச்சென்று, திருத்தத்துக்கான விண்ணப்பம் வழங்க உள்ளனர். கடந்த அக். 27ம் தேதி நிலவரப்படி, மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 11 லட்சத்து 96 ஆயிரத்து 499 ஆண், 12 லட்சத்து 48 ஆயிரத்து 72 பெண், 358 திருநங்கைகள் என, மொத்தம், 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர் உள்ளனர்.
ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு படிவ நகல்கள் வழங்கப்படும். ஒரு படிவத்தை பூர்த்தி செய்து, பி.எல்.ஓ.,க்களிடம் ஒப்படைக்கவேண்டும். மற்றொரு படிவத்தை, வாக்காளரே வைத்துக்கொள்ளலாம். படிவத்தில், வாக்காளரின் பெயர், அடையாள அட்டை எண், முகவரி மற்றும் வரிசை எண், சட்டசபை தொகுதியின் பெயர், மாநிலம் ஆகிய விவரங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டிருக்கும். வாக்காளரின் பழைய புகைப்படம் அச்சிடப்பட்டிருக்கும். புகைப்படத்தை மாற்ற விரும்புவோர், விண்ணப்பத்தில் இதற்கென கொடுக்கப்பட்டுள்ள இடத்தில், தங்கள் புதிய போட்டோவை ஒட்டலாம்.
பிறந்த தேதி, மொபைல் போன் எண், தந்தை அல்லது பாதுகாவலர் பெயர், தாயின் பெயர், தந்தை அல்லது பாதுகாவலரின் வாக்காளர் அட்டை எண் (இருந்தால் மட்டும்), தாயின் வாக்காளர் அட்டை எண் (இருந்தால் மட்டும்), தேவையை பொருத்து கணவன் அல்லது மனைவி பெயர் மற்றும் அவரது வாக்காளர் அடையள அட்டை எண், விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண் ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.
கடைசியாக நடைபெற்ற (2022ம் ஆண்டு) சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற வாக்காளர்கள், வாக்காளர் பெயர், அப்போதைய வாக்காளர் அடையாள அட்டை எண் (இருந்தால் மட்டும்), உறவினர் பெயர், உறவுமுறை, மாவட்டம், மாநிலம், சட்டசபை தொகுதி பெயர் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
முந்தைய தீவிர திருத்த பட்டியலில் உறவினர் பெயர் இடம்பெற்றிருப்பின், அவ்விவரங்களையும் பூர்த்தி செய்து, கடைசியில் கையொப்பமிடவேண்டும். பூர்த்தி செய்த படிவத்தை, பி.எல்.ஓ.விடம் ஒப்படைக்க வேண்டும். முந்தைய தீவிர திருத்தத்தில் பெயர் இடம்பெறாதவர்கள் மற்றும் உறவினர் பெயர் இடம் பெறாதவர்கள், அவ்விவரங்களை பூர்த்தி செய்யவேண்டிய அவசியமில்லை; சுய விவரங்களை மட்டும் பூர்த்தி செய்தாலே போதுமானது.

