/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேட்புமனு தாக்கல் துவங்கியாச்சு... முதல் நாளில் யாருமே வரவில்லை!
/
வேட்புமனு தாக்கல் துவங்கியாச்சு... முதல் நாளில் யாருமே வரவில்லை!
வேட்புமனு தாக்கல் துவங்கியாச்சு... முதல் நாளில் யாருமே வரவில்லை!
வேட்புமனு தாக்கல் துவங்கியாச்சு... முதல் நாளில் யாருமே வரவில்லை!
ADDED : மார் 20, 2024 11:07 PM

திருப்பூர் : திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான வேட்புமனு தாக்கல், கலெக்டர் அலுவலகம் மற்றும் சப்கலெக்டர் அலுவலகங்களில் நடைபெறுகிறது. இவ்விரு அலுவலகங்களிலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல்நாளான நேற்று, வேட்பாளர் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
தமிழகம் முழுவதும் 39 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல், வரும் ஏப்., 19ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக திருப்பூர் லோக்சபா தொகுதி உள்ளது.
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் கிறிஸ்துராஜ், நேற்று காலை, 10:00 மணிக்கு, படிவம் - 1 வாயிலாக, லோக்சபா தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார்.
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகமான திருப்பூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலகமான, திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்திலும், திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான வேட்புமனுதாக்கல் நடைபெறுகிறது.
கலெக்டர் அலுவலக இரண்டாவது தளத்தில், கலெக்டர் அறை அருகே உள்ள, 234ம் எண் அறையில் வேட்புமனு படிவம் வழங்கவும், மனுக்களை சரிபார்ப்பதற்கான வசதியும்; அறை எண்: 237ல், வேட்புமனுவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்யும் கலெக்டர் அலுவலகம் மற்றும் சப்-கலெக்டர் அலுவலகங்களை சுற்றி, 100 மீட்டர் எல்லைக்கோடு வரையப்பட்டுள்ளது.
இரு அலுவலகங்களிலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகனங்கள் நுழைவதை கட்டுப்படுத்த தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. 100 மீ., எல்லைக்குள், வேட்பாளர் வாகனம் மற்றும் 2 வாகனங்கள்; வேட்புமனு தாக்கலுக்கு ஒரு வேட்பாளருடன் அதிகபட்சம் நான்குபேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
முதல்நாளான நேற்று, திருப்பூர் தொகுதியில் வேட்பாளர் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. கலெக்டர் அலுவலகத்தில், கட்சியினர் வேட்பு மனுக்களை மட்டும் வாங்கிச்சென்றனர்.
வேட்பாளர் அல்லது அவரது பெயரை முன்மொழிபவர்களின் ஒருவர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம், வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

