ADDED : நவ 01, 2026 07:45 PM
குன்னத்துாரில் பேரூராட்சி சார்பில், ஒரு கோடியே 52 லட்ச ரூபாய் மதிப்பில் எரிவாயு தகன மேடை அமைக்கப்டுள்ளது. அதன் பராமரிப்பு பணிகள் குன்னத்துார் ரோட்டரி சங்கத்திடம் ஒப்படைக்க பட்டது. அடிப்படை வசதிகள் மேம்படுத்த ரோட்டரி சங்கத்தினர், 50 லட்ச ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டுகின்றனர். அதற்காக, ரோட்டரி சங்கத்தின் சார்பில், 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை அதன் தலைவர் கொமாரசாமி, பேரூராட்சி செயல் அலுவலரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
தேர் வீதி ஆக்கிரமிப்பு
பெருமாநல்லுார் கிராம சபா கூட்டத்தில், ஊர்பொதுமக்கள் நேற்று அளித்த மனுவில், ‘தேர் வலம் வரும் வீதிகளான, ஈஸ்வரன் கோவில் வீதி, போலீஸ் ஸ்டேஷன் வீதி, மாகாளியம்மன் கோவில் வீதிகளில், நாளுக்குநாள் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. 60 அடி அகலமாக இருந்தது, 30 அடியாக குறைந்துள்ளது. எனவே, தேர்வீதிகளை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும். காந்திநகர் மேல்நிலை குடிநீர் தொட்டி பழுதாகிவிட்டதால், புதிய தொட்டி கட்ட வேண்டும். 2வது வீதியில் பழுதான கான்கிரீட் பாதையை சீரமைக்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளனர்.
