/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முறைகேடான மின் பயன்பாடு ரூ.12.64 லட்சம் அபராதம்
/
முறைகேடான மின் பயன்பாடு ரூ.12.64 லட்சம் அபராதம்
ADDED : மே 18, 2025 11:25 PM
திருப்பூர்; அனுப்பர்பாளையம் கிராமிய மின்வாரிய அலுவலக எல்லையில், மகாலட்சுமி நகரில் மின்வாரிய உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்குள்ள வீடுகளில், முறைகேடாக இணைப்பு வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி உத்தரவுப்படி, மின்வாரிய அலுவலர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. பல அடுக்குமாடி கட்டடத்தில், தொழிற்சாலைகளுக்கான மின் பழு மின் இணைப்பை, சட்டவிரோதமாக, வர்த்தக ரீதியான வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதற்காக, மின் இணைப்பில் முறைகேடு செய்ததாக கூறி, 12 லட்சத்து, 64 ஆயிரத்து, 803 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே கட்டடத்தில், 2024 செப்., மாதம் ஆய்வு நடத்திய போதும், தொழிற்சாலை மின் இணைப்பை வணிக நோக்கில் பயன்படுத்திய குற்றத்துக்காக, 92 ஆயிரத்து, 836 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பொதுமக்கள் கூறுகையில், ''விதிமுறையை மீறி, முறைகேடாக மின் இணைப்பை பயன்படுத்தினால், அபராதம் விதிக்க வேண்டும். ஏழு நாட்களில் அறிவிப்பு செய்து, 45 நாட்களுக்குள் உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, கடந்த 8 மாதங்களாக கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான விசாரணை நடத்தி, மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மின்வாரிய அலுவலர்கள் குழு, கூட்டாய்வு நடத்தி, அபராதம் விதித்து, ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது; விரைவில், மேல்நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.