/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பையில் பற்றிய தீ; குடிநீர் குழாய்கள் நாசம்
/
குப்பையில் பற்றிய தீ; குடிநீர் குழாய்கள் நாசம்
ADDED : ஆக 20, 2025 01:13 AM

திருப்பூர்; திருப்பூரில் குவிந்து கிடந்த குப்பையில் ஏற்பட்ட தீ பரவி குடிநீர் திட்டப் பணிக்கு வைத்திருந்த குழாய்கள் எரிந்து சேதமானது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கடந்த ஒரு மாதமாக குப்பைகள் அகற்றுவதில் தேக்க நிலை நிலவுகிறது. வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் ஆங்காங்கே வார்டு பகுதியில் கிடைத்த காலியிடங்களில் குவித்து வைக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், குவிந்து கிடக்கும் குப்பைகள் சில இடங்களில் தீ வைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி, 46வது வார்டு வி.ஜி.வி., கார்டன் பகுதியில், நொய்யல் ஆற்றின் கரையை ஒட்டி காலியிடம் உள்ளது. அறநிலையத்துறைக்குச் சொந்தமான இந்த இடத்தில், மாநகராட்சி துாய்மைப் பணியாளர்கள் சுற்றுப்பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதுதவிர, குடிநீர் திட்டப் பணிகளுக்கு கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் இரும்பு குழாய்களும் இந்த இடத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் இங்கு குவிந்திருந்த குப்பையில் யாரோ தீ வைத்து விட்டனர். இந்த தீ மளமளவெனப் பரவி, அங்கிருந்த குடிநீர் திட்டக் குழாய்களிலும் பற்றி எரியத் துவங்கியது. இதில் ஏராளமான குழாய்கள் சேதமானது. தீயணைப்பு துறையினர் விரைந்து தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.