/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்னாள் படை வீரர்களுக்கு... முதல் மரியாதை!
/
முன்னாள் படை வீரர்களுக்கு... முதல் மரியாதை!
UPDATED : நவ 13, 2024 07:56 AM
ADDED : நவ 13, 2024 04:38 AM

திருப்பூர: ''ஸ்பர்ஸ்' சேவையை முறையாக பயன்படுத்தினால், நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்,'' என, கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசினார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்களுக்கான, 'ஸ்பர்ஸ்' சேவை விழிப்புணர்வு மற்றும் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். துணை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் சங்கீதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் படைவீரர்களுக்கா அறிமுகம் செய்யதுள்ள, 'ஸ்பர்ஸ்' சேவை குறித்து விளக்கப்பட்டது. முன்னாள் படைவீரர்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. கம்ப்யூட்டர் வாயிலாக உடனுக்குடன் பதிவு செய்து தீர்வு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
தியாகம் செய்தவர்கள்
புகழ்பட வாழ்கின்றனர்..
எனது தாத்தா ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். 22 ஆண்டுகள் நாட்டுக்காக உழைத்தார். கார்கில் போர் சூழல் 1999 முல் 2000 வரை போர்க்காலமாக இருந்தது. நாட்டுக்காக பாடுபடும் ராணுவ வீரர்கள், பல்வேறு தியாகங்களை செய்கின்றனர்.முன்னாள் ராணுவத்தினர், எவ்வளவோ தியாகம் செய்துள்ளனர். குடும்பத்தைவிட்டு, மற்ற பொழுதுபோக்குகளை தியாகம் செய்து, நாட்டுக்காக பணியாற்றுவது போற்றுதலுக்குரியது. போலீஸ் பயிற்சியின் போது சில மாதம் ராணுவ பயிற்சியில் இருந்துள்ளேன்.
நாட்டுக்காக தியாகம் செய்பவர்கள் புகழ்பட வாழ்கின்றனர். ராணுவ வீரர்களுக்கு முதல் எதிரி கடுமையான குளிர்தான்; இரண்டாவது தான் மற்ற நாட்டு வீரர்கள். முதலில் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக போரில் சண்டையிட்டு, நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை உள்ளது.
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது உங்களுக்காக வாழ்கின்றீர்கள். மொபைல் போன் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். வங்கி கணக்கு, ஏ.டி.எம்., கார்டு, பாஸ்வேர்டு போன்ற விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம். பரிசு விழுந்துள்ளதாக வரும் குறுஞ்செய்திகளை புறக்கணித்து விடுங்கள். பணம் எடுக்க பிறர் உதவி செய்தால், உடனே 'பின் நம்பரை' உடனே மாற்றிவிடுங்கள். தற்போது, 'சைபர் கிரைம்' அதிகமாகிவிட்டது. மிக கவனமாக இருந்து, உங்களது பணத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
- கிரீஷ் யாதவ்
போலீஸ் துணை கமிஷனர்
தலை வணங்குகிறோம்...
ராணுவ வீரர்களின் தியாகத்துக்கும், உழைப்புக்கும், மாவட்ட நிர்வாகம் தலைவணங்கி நன்றியை காணிக்கையாக்குகிறது. 'ஸ்பர்ஸ்' சேவையை முறையாக பயன்படுத்தினால், நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். முன்னாள் படைவீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய, மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயாராக இருக்கும். படைவீரர்களின் தியாகத்தையும், உழைப்பையும் நாடறியும்; ஒவ்வொரு குடிமகனும் அறிய வேண்டும். நாட்டுக்காக ஒட்டுமொத்த வாழ்க்கையை அர்ப்பணிக்கும் நீங்கள், எப்போதும் நாட்டுப்பற்று மிக்கவராக இருக்கிறீர்கள். கோரிக்கையை பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
- கலெக்டர் கிறிஸ்துராஜ்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக, திருப்பூர், தாராபுரம், உடுமலை கோட்டம் வாயிலாக, பல்வேறு தொழில்களில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. முன்னாள் ராணுவத்தினர், அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், தமிழக அரசு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது. தொழில்நுட்ப பயிற்சி பெற்று,அதற்கு ஏற்ப தொழில் வாய்ப்புகள் பெறவும் உதவி செய்யப்படும்.
- ஜெயலட்சுமி
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு
கழக உதவி இயக்குனர்
கவனமாக இருக்கணும்!
முன்னாள் படைவீரர்களுக்கு தேவையான அனைத்து கடன் உதவிகளும் வழங்கப்படும். தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தனியார் வங்கிகள் மூலமாக, கடனுதவி வழங்கப்படுகிறது. 'சைபர் கிரைம்' குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வயதானவர்களை ஏமாற்றி, எளிதாக பணத்தை திருடிவிடுகின்றனர். எனவே, எவ்வித ஓ.டி.பி., களையும் பிறருக்கு பகிர வேண்டாம். பரிசு விழுந்துள்ளதாக வரும் 'லிங்க்' எதையும் பின்தொடர வேண்டாம். மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- துர்கா பிரகாஷ்
மாவட்ட முன்னோடி வங்கி
(கனரா) மேலாளர்
மூன்று மணி நேர தாமதம்
கலெக்டர் அலுவலகத்தில், காலை, 9:00 மணி முதல், குறைகேட்பு நடப்பதாக, அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் படைவீரர்களும், அவர்களது குடும்பத்தினரும், காலை, 9:00 மணிக்கே வந்து விட்டனர். இருப்பினும், கலெக்டர் வர தாமதம் ஏற்பட்டதால், அனைவரும் சோர்ந்து போய் காணப்பட்டனர். மதியம், 12:15 மணிக்கே கலெக்டர் கிறிஸ்துராஜ் குறைகேட்பு முகாமை துவக்கி வைத்தார்.