
திருப்பூர்: புரட்டாசி மாதம் துவங்கியது முதல் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை குறைவாகவே இருந்தது.
கடந்த, 17ம் தேதியுடன் புரட்டாசி முடிந்த நிலையில், நேற்றுமீன் விற்பனை சுறுசுறுப்பாக இருக்கும் என மீன் வியாபாரிகள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், திருப்பூரில் நள்ளிரவில் துவங்கி துாறல் மழை, அதிகாலையில் வெளுத்து வாங்கியது; இதனால், மீன் விற்பனை மந்தமானது.
மீன் வியாபாரிகள் கூறுகையில், 'அதிகாலை, 5:00 முதல் 7:00 மணி வரை தான் அதிகளவில் வாடிக்கையாளர்கள் வருவர். அதிகாலை 4:00 மணிக்கு துவங்கிய மழை இரண்டு மணி நேரம் கடந்தும் தொடர்ந்ததால், வாடிக்கையாளர் வருகை பெருமளவு குறைந்தது. தீபாவளி காரணமாக, கடல் மீன் வரத்து, 60 டன்னாக குறைந்தது.
இருந்தும் விற்பனை குறைவு என்பதால், விலை உயரவில்லை. மேலும் பலரும் புத்தாடை வாங்கவும், சொந்த ஊருக்கும் பயணித்ததால், எதிர்பார்த்த விற்பனை இல்லை,' என்றனர்.