/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெங்காயத்துக்கு நிலையான விலை; விவசாயிகள் கோரிக்கை
/
வெங்காயத்துக்கு நிலையான விலை; விவசாயிகள் கோரிக்கை
ADDED : நவ 14, 2024 04:17 AM
உடுமலை: உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு, ஆண்டுக்கு இரு சீசன்களில், சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாய் என இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது.
கடந்த, 2020 மற்றும் கடந்தாண்டு துவக்கத்தில், தொடர் மழை காரணமாக, சின்ன வெங்காய உற்பத்தி பாதித்தது.
தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாமல், விலை, தாறுமாறாக உயர்ந்து, நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, பாதிப்பை தவிர்க்க, தமிழக அரசு சார்பில், சின்னவெங்காயம் சாகுபடிக்கு, ஊக்கமளிக்கப்பட்டது.
இதனால், சாகுபடி பரப்பு அதிகரித்த நிலையில், கடந்த சீசனில், அறுவடையின் போது, விலை வீழ்ச்சி ஏற்பட்டு, பல ஆயிரம் டன் சின்னவெங்காயம், விளைநிலங்களில் இருப்பு வைப்பது தொடர்கதையாகி விட்டது.
பல மாதங்கள் இருப்பு வைத்தும் விலையில், மாற்றம் இல்லாததால், கிடைத்த விலைக்கு விற்பனை செய்து விவசாயிகள் நஷ்டமடைகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: சின்னவெங்காயம் அறுவடையின் போது, விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக சின்னவெங்காயத்துக்கு நிலையான விலை கிடைக்க செய்ய வேண்டும்.
சாகுபடி பரப்பு, உற்பத்தி அடிப்படையில், அறுவடை சீசனில், சின்னவெங்காயத்துக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.
இதனால், நிலையான விலை கிடைத்தால், விவசாயிகள், நுகர்வோர் என இருதரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாது.
இவ்வாறு, தெரிவித்தனர்.