/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி ஆற்றில் வெள்ளம்: தரைப்பாலங்கள் மூழ்கின
/
அமராவதி ஆற்றில் வெள்ளம்: தரைப்பாலங்கள் மூழ்கின
ADDED : டிச 13, 2024 11:08 PM

திருப்பூர்,; தாராபுரம் அமராவதி ஆற்றில் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர்காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அலங்கியம் மற்றும் வீராச்சிமங்கலத்தில் தரைப் பாலங்கள் தண்ணீரில் மூழ்கின.
உடுமலை, அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி அமராவதி அணையில் இருந்து 36-ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது அமராவதி ஆற்றில் செல்கிறது. இதனால், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தாராபுரம் அருகே அலங்கியம் ஆற்று பாலம் பகுதியில், பழநி சண்முக நதியில் திறந்து விடப்பட்ட, 20-ஆயிரம் கன அடி நீர் அமராவதி ஆற்றில் கலக்கிறது. அவ்வகையில், இங்கு 56 -ஆயிரம் கன அடி நீர் வரத்து காணப்படுகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் கரைகளைத் தொட்டவாறு தண்ணீர் செல்கிறது.
அதேபோல், அலங்கியம் - -கொங்கூர் தரைப்பாலம், வீராச்சிமங்கலம், ஆத்துக்கால்புதுார் தரைப்பாலம் ஆகியன நீரில் மூழ்கியது. பாதுகாப்பு கருதி அப்பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அமராவதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஈஸ்வரன் கோவில் அருகே போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆற்றில் யாரும், இறங்க வேண்டாம் என வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.