/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாய்ந்த கேள்விக்கணைகள்; பரிதவித்த அதிகாரிகள்: 'அதிர்ந்த' விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
பாய்ந்த கேள்விக்கணைகள்; பரிதவித்த அதிகாரிகள்: 'அதிர்ந்த' விவசாயிகள் குறைதீர் கூட்டம்
பாய்ந்த கேள்விக்கணைகள்; பரிதவித்த அதிகாரிகள்: 'அதிர்ந்த' விவசாயிகள் குறைதீர் கூட்டம்
பாய்ந்த கேள்விக்கணைகள்; பரிதவித்த அதிகாரிகள்: 'அதிர்ந்த' விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : அக் 25, 2024 10:38 PM

திருப்பூர் : திருப்பூரில் நேற்று நடந்த விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தில், பல்வேறு புகார்கள் குறித்து விவசாயிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதிகாரிகள் திணறிய நிலையில் கலெக்டர் தலையிட்டு பதில் கூறி விவசாயிகளை சமாதானப்படுத்தினார்.
மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை கேட்பு கூட்டம், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
அதிகாரிகள் போட்டோஷூட்
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது
மவுனகுருசாமி(மாநில செயலாளர், கிஷான் மோக்ஷா): பி.ஏ.பி., நீர் வினியோகத்தில் குழப்பம் உள்ளது. ரங்கசமுத்திரம் பகுதிக்கு நீர் கிடைப்பதில்லை. அதிகாலை 2:00 மணிக்கு நீர் திறந்து விட்டு அதிகாரிகள் நின்று போட்டோ எடுத்துச் செல்கின்றனர். காலை 6:00 மணிக்கு நீர் வருவதில்லை. அதிகாரிகள் போட்டா ஷூட் மட்டும் நடக்கிறது. தார் ரோடு அமைத்தும், காட்டுப்பன்றியைக் கட்டுப்படுத்த கோரியும், உடுமலை வார சந்தையில் சீரமைப்பு செய்ய கோரியும் ஓராண்டுக்கும் மேல் கோரிக்கை நிலுவையில் உள்ளது. முன்பகுதியில் இறைச்சி கடைகள் செயல்படுகின்றன. காய்கறி கடைகளுக்கு இடமில்லை.
n அப்புசாமி(தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், திருப்பூர் வடக்கு ஒன்றியம்): சப் கலெக்டர் பணியிடம் நிரப்பாமல் ஏராளமான பிரச்னைகள் தீர்வு காணப்படாமல் இழுபறியாக உள்ளது. பரமசிவம்பாளையம் பள்ளியில் மின் கம்பி தாழ்வாக உள்ளது. மாணவர்களுக்கு ஆபத்து உள்ளது. மூன்று மாதமாக இது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.
விசாரணை கமிஷன் தேவை
முகிலன் (ஒருங்கிணைப்பாளர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்): பி.ஏ.பி., வாய்க்காலில் அரசு உத்தரவை மீறி கசிவு நீர் தடுப்பணையிலிருந்து தனி நபர்கள் பயன்பாட்டுக்கு நீர் கொண்டு செல்கின்றனர். குட்டப்பாளையம் குவாரியை மூடியதாக தெரிவித்தனர். தற்போது அங்கு நடைச் சீட்டு வழங்கி, கனிம வளம் எடுக்கின்றனர். சட்டத்துக்குப் புறம்பாக வெடி மருந்து பயன்படுத்துகின்றனர். திருப்பூர் வெடி விபத்து உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நடைபெறும் சட்டத்துக்குப் புறம்பான வெடி மருந்து பயன்பாடு குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். நொய்யலில் கழிவு நீர் கலப்பது தடுக்க வேண்டும்.
n கிருஷ்ணசாமி(தலைவர், நஞ்சராயன் குளம் பாதுகாப்பு அமைப்பு): வேலம்பட்டி சுங்கச் சாவடி ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ளது. அதை அகற்ற வேண்டும். நெருப்பெரிச்சலில் மாநகராட்சி கமிஷனர் பெயரில் இருந்த நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
பால் கொள்முதல் விலை உயருமா?
கொளந்தசாமி(மாவட்ட தலைவர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம்): ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளருக்கு வழங்கிய 3 ரூபாய் ஊக்கத் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய விலைவாசி உயர்வுக்கேற்ப லிட்டருக்கு 10 ரூபாய் கொள்முதல் விலை உயர்த்த வேண்டும். கால்நடை மருந்துகள்; மானிய விலை கலப்பு தீவனம், கால்நடை இன்சூரன்ஸ் ஆகியன வழங்க வேண்டும்.
n குமார் (மாவட்ட செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): அதிகரித்து வரும் இறைச்சி கடைகளிலிருந்து கழிவுகள் முறையாக வெளியேற்றாமல் தெரு நாய்களுக்கு வீசப்படுகிறது. இது கிடைக்காத நேரத்தில் தெருநாய்கள் கால்நடைகளைத் தாக்குகின்றன. இறைச்சி கழிவுகள் அகற்றுவதில் உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடைமுறையைக் கையாள வேண்டும். மாநகராட்சி, போலீஸ் துறை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தனியாக கூட்டம் நடத்த வேண்டும். விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் தடம் மாறிச் செல்கிறது. இதில் விவசாய சங்கத்தினர், விவாசாயிகள் மட்டும் பங்கேற்க செய்ய வேண்டும்.
n ராஜரத்தினம்(தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மடத்துக்குளம் தாலுகா): வேடபட்டி ஊராட்சியில் நுாறு நாள் திட்ட நிதியில், மயானப் புறம்போக்கில் கிணறு வெட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது விதிகளுக்குப் புறம்பானது. இதை அனுமதித்த ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
n ரமேஷ்(மாநகர ஒருங்கிணைப்பாளர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்): தென்னந் தோப்புக்குள் கடந்து செல்லும் மின் கம்பிகளால் பெரும் விபத்து அபாயம் உள்ளது. மாற்று ஏற்பாடாக கேபிள் அமைக்க வேண்டும். தெற்கு உழவர் சந்தையில் விவசாயிகள் என அடையாள அட்டை பெற்றுக் கொண்டு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். புகார் தெரிவித்த விவசாயியை வியாபாரிகள் மிரட்டுகின்றனர்.
மின் கம்பம் வாங்க லஞ்சம்
கணேஷ்: உர விற்பனை மையங்களில் உரம் வாங்கினால், யூரியா வாங்க கட்டாயப்படுத்துகின்றனர். மூன்று லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி தட்கல் முறையில் 3 முதல் 4 ஆண்டுகள் காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் உள்ளனர். மின் கம்பம் மாற்றம் செய்ய தலா 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர். தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தையில் பராமரிப்பு இல்லை. ரோட்டில் கடை போட்டால் சுங்கம் கேட்கின்றனர்.
n ஞானப் பிரகாசம்: மூங்கில் தொழுவு சொசைட்டிக்கு ெசயலாளர், ராமச்சந்திராபுரத்துக்கு மின்வாரிய உதவி பொறியாளர் நியமிக்க வேண்டும். சிக்கனுாத்துக்கு குடிநீர் கிடைப்பதில்லை. நுாறு நாள் திட்ட பணியாளர்களை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
அதிகாரிகள் பதிலால் அதிருப்தி
குறை கேட்பு நாளில் வழங்கும் மனுக்கள் மீதான தீர்வுகள் குறித்து தெரிவிக்க வேண்டும். தெரு நாய் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விளக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை விவசாயிகள் சரமாரியாக அடுக்கினர். சில துறை அலுவலர்கள் தங்களுக்குத் தெரிந்த விவரங்களை கூற, அதில் திருப்தியடையாமல் விவசாயிகள் கடும் வாக்குவாதம் செய்தனர். சில இடங்களில் கலெக்டர் தலையிட்டு சில அறிவுறுத்தல்களை வழங்கி, விவசாயிகளை சமாதானப்படுத்தினார்.