/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை துறையினருக்கு வெளி மாநில அரசுகள் சிவப்பு கம்பளம்!
/
பின்னலாடை துறையினருக்கு வெளி மாநில அரசுகள் சிவப்பு கம்பளம்!
பின்னலாடை துறையினருக்கு வெளி மாநில அரசுகள் சிவப்பு கம்பளம்!
பின்னலாடை துறையினருக்கு வெளி மாநில அரசுகள் சிவப்பு கம்பளம்!
ADDED : ஜூலை 20, 2025 11:11 PM

திருப்பூர்; நிரந்தர வேலைவாய்ப்புடன் கூடிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் முயற்சியாக, ஒடிசா, பீஹார், ம.பி., உள்ளிட்ட வெளிமாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் தொழில் துவங்க வருமாறு திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினருக்கு அழைப்பு விடுத்து வருகின்றன.
பின்னலாடை வர்த்தகத்தில் திருப்பூர் கோலோச்சுகிறது; ஆண்டுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி; 30 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு வர்த்தகம் நடக்கிறது. ஒடிசா, பீஹார், உ.பி., மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 21 வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு பணிபுரிகின்றனர். லட்சக்கணக்கானோர், இங்கு வேலைவாய்ப்பு பெறுவது, பல்வேறு மாநிலங்களின் கவனங்களை ஈர்த்துள்ளது.
சலுகைகளுடன்வரவேற்பு
ஒரு லட்சம் தொழிலாளர் உடனடியாக வந்தாலும் திருப்பூரில் வேலை தர தயார் நிலையில் நிறுவனங்கள் உள்ளன. தொழிலாளர்களுக்கு, திறன் பயிற்சி அளித்து, திருப்பூர் அனுப்பி வந்த வெளி மாநில அரசுகள் பலவும், பின்னலாடை தொழிலை தங்கள் மாநிலத்திலும் பரவச்செய்யவும், வலுவுள்ளதாக்கவும் யோசிக்கத் துவங்கியுள்ளன.
தமிழகத்தில், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் உள்ளதை அறிந்து, அதிரடி மின்கட்டண சலுகை, முத்திரைத்தீர்வை சலுகை, நிலம், கட்டட வசதி, முதலீட்டு மானியம் என, அதிரடி சலுகைகளுடன் வரவேற்கின்றன.
சமீபத்தில் திருப்பூர் வந்து சென்ற, ஒடிசாவை சேர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும், தங்கள் மாநிலத்தில் தொழில் துவங்க வருமாறு அழைத்துள்ளார்.
ஏற்றுமதியாளர் குழு25ல் ஒடிசா பயணம்
நிறுவனங்கள் துவங்க கட்டடம் தயார்நிலையில் இருப்பதால், 'பிளக் அண்ட் பிளே' முறையில், வந்ததும் உற்பத்தியை துவக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, 25ம் தேதி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் குழு, ஒடிசாவுக்கு பயணமாகவும் தயாராகிவிட்டது.
ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், ''ம.பி., சலுகை வழங்கி அழைத்ததால், பி.எல்.ஐ., (உற்பத்தி சார் ஊக்குவிப்பு) திட்டத்தில், திருப்பூரின், ஒரு நிறுவனம் மட்டுமே தனது கிளையை, ம.பி.,யில் துவங்கியது. மற்ற நிறுவனங்கள் விசாரணை அளவில் நின்றுவிட்டன.
பி.எல்.ஐ., திட்டத்தை சீர்திருத்தம் செய்து அறிவித்தால், வாய்ப்புள்ளது. அரசு திட்ட உதவி கிடைத்தால், நிச்சயம் பின்னலாடை நிறுவனங்களின் கிளைகள், வட மாநிலங்களில் உருவாகும்,' என்றனர்.
இதுதான் சரியான தருணம்
வடமாநில அரசுகள் அழைத்தாலும், இதுவரை ஒரு நிறுவனம் மட்டுமே சென்றுள்ளது. பிரிட்டன், ஐரோப்பியா, அமெரிக்காவுடன், வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால், வாய்ப்புகள் அதிகம் வரும். திருப்பூரில் மட்டும் அத்தனை ஆர்டர்களுக்கேற்ப ஆடைகளை உற்பத்தி செய்துவிட முடியாது; எனவே, வடமாநிலங்களில் தொழில் துவங்க இது சரியான தருணம்; வாய்ப்புள்ள நிறுவனங்கள், தொழிலாளர் வளம் நிறைந்த வடமாநிலங்களில் நிறுவ தயாராகி வருகின்றன.
- இளங்கோவன், தலைவர், திருப்பூர் தொழில்முறை பங்களிப்போர் கூட்டமைப்பு.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தான், திருப்பூரில் 90 சதவீதம் உள்ளன; 10 சதவீதம் மட்டுமே, நுாற்பாலை முதல், பேக்கிங் வரை அனைத்து பிரிவுகளையும் கொண்ட நிறுவனங்கள் உள்ளன.
வடமாநில அரசுகள் அழைத்தாலும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் செல்ல முடியாது. அனுபவம் இல்லாமல், புதிய தொழில்முனைவோர் வடமாநிலம் சென்று வெற்றிபெறுவது கடினம்.
திருப்பூரில் இருந்து பின்னலாடை தொழிலை வெளியே கொண்டு செல்லாமல், தமிழகத்தில் வேலை வாய்ப்பு குறைந்த மாவட்டங்களில், கிளைகளை துவக்க, தொழில்துறையினர் முன்வர வேண்டும். அப்போதுதான், பொருளாதார வளர்ச்சி மாநிலத்தில் பரவியிருக்கும்.
- முத்துரத்தினம், தலைவர்,திருப்பூர் ஏற்றுமதியாளர்மற்றும் உற்பத்தியாளர்சங்கம் - டீமா.