/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் வனக்கோட்டத்தில் 622 கி.மீ., நீளத்திற்கு தீ தடுப்பு கோடுகள்! அமைக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரம்
/
திருப்பூர் வனக்கோட்டத்தில் 622 கி.மீ., நீளத்திற்கு தீ தடுப்பு கோடுகள்! அமைக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரம்
திருப்பூர் வனக்கோட்டத்தில் 622 கி.மீ., நீளத்திற்கு தீ தடுப்பு கோடுகள்! அமைக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரம்
திருப்பூர் வனக்கோட்டத்தில் 622 கி.மீ., நீளத்திற்கு தீ தடுப்பு கோடுகள்! அமைக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரம்
ADDED : பிப் 04, 2025 11:56 PM

உடுமலை; ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்ட பகுதிகளில், கோடை காலத்தில் வனத்தீ ஏற்படுவதை தடுக்கும் வகையில், 622 கி.மீ., நீளத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்தில், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு, காங்கயம் உள்ளிட்ட வனச்சரகங்கள், 608.82 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது.
இக்காப்பகம், அரிய வகை மரங்கள், உயிரினங்கள் என உயிர்ச்சூழல் மண்டலமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், மழைப்பொழிவு குறைந்துள்ள நிலையில், கோடை காலத்தில், வெயிலின் தாக்கத்தால் இங்குள்ள புற்கள், செடிகள் காய்ந்து, வனத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் வழியே, உடுமலை - மூணாறு பிரதான வழித்தடம் அமைந்துள்ள நிலையில், பொதுமக்கள், சுற்றுலா பயணியர் வாயிலாகவும், தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால், கோடை காலத்திற்கு முன்பே, காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள், கடந்த காலங்களில் தொடர்ந்து காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில், மலைவாழ் மக்களை கொண்டு, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பிரதான ரோடுகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், வனத்தீ ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில், 12 மீட்டர் அகலத்திலும், ஒரு சில பகுதிகளில், 6 மீட்டர், 3 மீட்டர் அகலத்திலும் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ரூ.94.61 லட்சம் ஒதுக்கீடு
இக்கோடுகள், புற்கள், செடி, கொடிகள் அகற்றப்பட்டு, துாய்மையாக பராமரிக்கப்படுகிறது. இதற்காக, திருப்பூர் வனக்கோட்டத்திற்கு, ரூ. 94.61 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், உடுமலை வனச்சரகத்தில், 195 கி.மீ., நீளத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்க திட்டமிடப்பட்டு, நேற்று வரை, 130 கி.மீ., நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
அமராவதி வனச்சரக பகுதியில், 157 கி.மீ., நீளத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டு, இதுவரை, 110 கி.மீ.,க்கு அமைக்கப்பட்டுள்ளது. கொழுமம் வனச்சரகத்தில், 72 கி.மீ., நீளத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டு, 50 கி.மீ., நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
வந்தரவு வனச்சரகத்தில், 160 கி.மீ., நீளத்திற்கு அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நேற்று வரை, 110 கி.மீ., நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல், திருப்பூர் மாவட்டம், காங்கயம் வனச்சரகத்தில், 38 கி.மீ., நீளத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்களை கொண்ட குழு அமைத்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
காட்டுத்தீ ஏற்பட்டால், வனப்பகுதியில், பூச்சிகள், புழுக்கள், பறவை இனங்கள், சிறு உயிரினங்கள் என பல ஆயிரக்கணக்கான வன உயிரினங்களும், அதன் வாழ்விடங்களும் அழிந்து விடும்.
இது குறித்தும், வனத்தீ ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.