/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளாஸ்டிக்கை மறந்தாக வேண்டும்... மூங்கில் பொருட்கள் மருந்தாக வேண்டும்!
/
பிளாஸ்டிக்கை மறந்தாக வேண்டும்... மூங்கில் பொருட்கள் மருந்தாக வேண்டும்!
பிளாஸ்டிக்கை மறந்தாக வேண்டும்... மூங்கில் பொருட்கள் மருந்தாக வேண்டும்!
பிளாஸ்டிக்கை மறந்தாக வேண்டும்... மூங்கில் பொருட்கள் மருந்தாக வேண்டும்!
ADDED : செப் 22, 2024 03:03 AM

'பிளாஸ்டிக்'கை ஒழிப்போம்... பூமியை பாதுகாப்போம்' என்ற கோஷத்துடன், அவ்வப்போது விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்படுகின்றன. அதன்பின்னரும், பூமிக்கு பாரமாகும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறைந்ததாக தெரியவில்லை. பசுமைக்கு எதிரான பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத இடமே இல்லை எனும் அளவுக்கு 'நீக்கமற' நிறைந்து விட்டது.
எதிர்கால சந்ததியினர் நலமுடன் வாழ, பிளாஸ்டிக் பயன்பாட்டை மறந்தாக வேண்டும்... அதற்கு மூங்கில் பிரம்புகளில் செய்யப்படும் பொருட்களே மருந்தாக வேண்டும் என்கிறார், பொறியியல் பட்டதாரி பெண் பாக்கியலட்சுமி.
'எனது தந்தை சிவியார் நடராஜன், 40 ஆண்டுகளாக, மூங்கில் கூடை முடைந்து விற்று வந்தார். பாரம்பரியமான அதே தொழிலை, நவீனமாக்கி நமக்கான பொருளாக மாற்ற வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை மறக்க, முழு நேரமும் இத்தொழிலில் இறங்கிவிட்டதாக கூறுகிறார்.
கஜலட்சுமி தியேட்டர் ரோட்டில், வழக்கமான மூங்கில் கூடை, சீர்கூடை, முறம், பெட்டிக்கூடை, துடைப்பம் விற்கும் கடையில், பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில், கண்கவர் கூடைகள், கலைநயமான பொருட்கள் இருந்ததை வியப்பாக பார்த்தோம்.
''வாங்க சார்... இது 'கவுனா கிராஸ்'ல் செய்தது தான்... நெறைய பேர் விரும்பி வாங்கிட்டு போறாங்க.'' என்று அழைத்தார் அந்த விற்பனையாளர்.
''அசாம், திரிபுரா, மேகாலயா பகுதிகளில் விளையும், மூங்கில் வகையை சேர்ந்த பொருளில் இருந்து, பல்வகை கலைநயம் மிகுந்த பொருட்களை தயாரிக்கிறோம். திருப்பூரிலேயே தயாரித்து, மூன்று கடைகளில் விற்பனை செய்து வருகிறோம். இங்கு, 500 முதல், 5000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் உள்ளன. கோவிலுக்கு எடுத்துச்செல்லும் 'பூஜா கூடை'கள், கிச்சனில் பயன்படுத்தும் பொருட்கள், அழகிய கைப்பைகள், எம்பிராய்டரிங் வேலைப்பாடுடன் கூடிய பைகர், மூடியுடன் கூடிய சிறிய பெட்டிகள்.
சிறிய தட்டுகள், சிறிய கூடைகள், பூச்செண்டு கூடைகள், மூங்கில் திரை என, 25 வகையான பொருட்களை தயாரித்து விற்கிறோம். இவற்றை, கவனமாக பயன்படுத்தினால், நீண்ட நாட்களுக்கு உழைக்கும். சிறிய பழுதானாலும், நாங்களே சரிசெய்தும் கொடுக்கிறோம்.
கலர் கலராக விற்கும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல், இதுபோன்ற இயற்கை சார் பொருட்களுக்கு மாற வேண்டும். நாம் மீண்டும் பழைய வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும்; அப்போதுதான், பூமியும் எவ்வித பாதிப்புமின்றி நம்முடன் பயணிக்கும்.
சிலர் விரும்பி கேட்பதால், மூடியுடன் பேழைகளும் தயாரித்து கொடுக்கிறோம். விரைவில், மூங்கில் சேர், டீப்பாய் போன்ற பர்னிச்சர் தயாரித்து விற்கவும் முடிவு செய்துள்ளோம்... ' என்றார் எதார்த்தம் குறையாமல்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான, இயற்கைக்கு ஏற்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துவதும், இயற்கைக்கு நாம் செய்யும் இறை சேவை தான்... என்று வாழ்த்தியவாறே புறப்பட்டோம்.