/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நரிகள் நடமாட்டம்: கண்காணிக்க 'கேமரா'
/
நரிகள் நடமாட்டம்: கண்காணிக்க 'கேமரா'
ADDED : பிப் 05, 2025 12:32 AM

திருப்பூர்; காங்கயம் பகுதியில் நரிகள் நடமாட்டத்தை கண்காணிக்க, வனத்துறை சார்பில் கேமரா வைக்கப்பட்டுள்ளது.
காங்கயம் தாலுகா, சேனாபதிபாளையம் கிராமம், சுந்தராடிவலசு பகுதியில் நரிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள், மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு வழங்கினர்.
விவசாயிகள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் செம்மறியாடு வளர்ப்பு தான் பிரதானம். கடந்த ஓரிரு ஆண்டாக நரிகளின் இனப்பெருக்கம் அதிகரித்திருக்கிறது. தினமும் செம்மறியாட்டு குட்டிகளை அடித்து, தின்கிறது. இதனால், எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கிறது,' என்றனர்.
புகாரை தொடர்ந்து, காங்கயம் வனச்சரகம் சார்பில், அப்பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆடு வளர்ப்போரின் கோரிக்கைகளை வனத்துறையினர் தெளிவாக கேட்டனர். பின், நரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, சுந்தராடிவலசு பகுதியில் கேமரா பொருத்தப்பட்டது.
வனத்துறையினர் கூறுகையில், 'ஆடு வளர்ப்போரின் புகாரை தொடர்ந்து, நரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா வைத்துள்ளோம். கேமராவில் பதிவாகும் நரிகளின் நடமாட்டம், அவற்றால் பலியாகும் கால்நடைகள் உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்திய பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.