/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிளை நுாலகங்களில் இலவச பயிற்சி; இளைஞர்கள் எதிர்பார்ப்பு
/
கிளை நுாலகங்களில் இலவச பயிற்சி; இளைஞர்கள் எதிர்பார்ப்பு
கிளை நுாலகங்களில் இலவச பயிற்சி; இளைஞர்கள் எதிர்பார்ப்பு
கிளை நுாலகங்களில் இலவச பயிற்சி; இளைஞர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 18, 2025 08:47 PM
உடுமலை; பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற இளைஞர்களுக்காக கிளை நுாலகங்களில், இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், மாவட்ட நுாலக ஆணைக்குழுவின் கீழ், உடுமலையில், டிஜிட்டல் நுாலகம் மற்றும் 15க்கும் மேற்பட்ட கிளை நுாலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நுாலகங்களை, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும், இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு முன்பு, இரு நுாலகங்களில், இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்று வந்தனர். தற்போது, இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதில்லை.
கிளை நுாலகங்களில், போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தினால், கிராமப்புற இளைஞர்கள் அதிகளவு பயன்பெறுவார்கள். குறிப்பாக, கணியூர், மடத்துக்குளம், பெதப்பம்பட்டி உள்ளிட்ட கிராமப்புற கிளை நுாலகங்களிலும், இந்த பயிற்சி வகுப்புகளை, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அப்பகுதி இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட நுாலக ஆணைக்குழு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக கிளை நுாலகங்களில், ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.