sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தொழிலாளர் முதல் தொழில்முனைவோர் வரை 'சைபர்' குற்றவாளிகளிடம் சிக்கும் பரிதாபம்

/

தொழிலாளர் முதல் தொழில்முனைவோர் வரை 'சைபர்' குற்றவாளிகளிடம் சிக்கும் பரிதாபம்

தொழிலாளர் முதல் தொழில்முனைவோர் வரை 'சைபர்' குற்றவாளிகளிடம் சிக்கும் பரிதாபம்

தொழிலாளர் முதல் தொழில்முனைவோர் வரை 'சைபர்' குற்றவாளிகளிடம் சிக்கும் பரிதாபம்


ADDED : ஆக 02, 2024 05:33 AM

Google News

ADDED : ஆக 02, 2024 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூரில், பின்னலாடை தொழில்முனைவோர் முதல் தொழிலாளர் வரை அனைத்துதரப்பினரும், வெவ்வேறு வகைகளில், 'சைபர்' குற்றவாளிகளின் வலையில் சிக்குகின்றனர்.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தில்(சைமா) நடந்த கருத்தரங்கில், மோசடி ஆசாமிகளின் வலையில் விழாமல் தற்காத்துக்கொள்வது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விரிவான விளக்கம் அளித்தனர்.

புதுப்புது வழிகளில் ஏமாற்றும் யுத்தி


திருப்பூர் மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் செண்பகவள்ளி கூறியதாவது:

சைபர் குற்றங்கள் நாளுக்குள்நாள் அதிகரித்துவருகின்றன. முன்பு, வடமாநிலத்தவர்கள் போல் பேசி, கிரெடிட் கார்டு எண் மற்றும் ஓ.டி.பி., கேட்டு வந்தனர். தற்போதோ, வெவ்வேறு வழிகளில் மோசடி ஆசாமிகள் வலைவிரிக்கின்றனர்.

' ரிவார்டு பாய்ன்ட்' வழங்குவதாக 'லிங்க்' அனுப்பி, கிரெடிட் கார்டில் உள்ள தொகையை கபளீகரம் செய்கின்றனர். ஆன்லைன் பொருட்கள் வாங்கினால் சிக்கிவிடுவோம் என ஆசாமிகள் தெரிந்துகொண்டனர். இப்போதெல்லாம், மோசடி செய்யும் தொகையை, துபாய் கரென்ஸியாக மாற்றி, எடுத்துக்கொள்கின்றனர்.

ரூ.3 லட்சம் கடன் பெற ரூ.3.15 லட்சம் பறிபோனது


கடன் தருவதாக கூறி செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது, மொபைல் போனில் உள்ள அனைத்து தகவல்களையும் திருடிவிடுவர். போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து, நண்பர்களுக்கு பகிர்வதாக கூறி, பணம் கேட்டு மிரட்டுவர். பெண் ஒருவர் 3 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 3.15 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார். கடன் கேட்கும் நம்மிடமிருந்து ஏன், கடன் கொடுப்பவர் தொகை கேட்கிறார் என்கிற சிந்தனை கூட பலருக்கு இல்லை.

சிறிய தொகைக்கு மயங்கினால் பெரிய தொகை காலியாகும்


வங்கிகளுக்கு செல்ல தயங்கி, ஆன்லைனிலேயே கே.ஒய்.சி., அப்டேட் செய்கிறோம். இவர்களில் பலர், ஹேக்கர்களின் வலையில் தங்களை சிக்கவைத்துக்கொள்கின்றனர். பகுதி நேர வேலை என கூறி, 100 ரூபாயில் துவங்கி மூவாயிரம் ரூபாய் வரை படிப்படியாக சிறிய தொகைகளை செலுத்தக்கோருவர்; ஒவ்வொரு நிலையிலும் நாம் செலுத்துவதைவிட, கூடுதல் தொகை வழங்கி, நம்பிக்கையை ஏற்படுத்துவர். இறுதியில், லட்சக்கணக்கான ரூபாயை செலுத்தக்கோரி, சுருட்டிவிட்டு தலைமறைவாகிவிடுகின்றனர். சமூக வலைதளங்களிலிருந்து போட்டோ மற்றும் விவரங்களை பெற்று, போலி கணக்கு உருவாக்கி, நட்பு வட்டத்தில் உள்ளவர்களிடம் பணம் கேட்பதும் பரவலாகிவருகிறது.

திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள், உலகளாவிய வர்த்தகர்களுடன் தொடர்புவைத்துள்ளனர். ஆடைக்கான தொகை, ஏதோ ஒரு வங்கி கணக்கிலிருந்து நமக்கு வந்து சேர்ந்துவிட்டது என நினைக்கக்கூடாது. ஒருவேளை அந்த தொகை, யாரேனும் ஒருவருக்கு மோசடி வலைவிரித்து, அதன்மூலம் உங்களுக்கு அனுப்பப்பட்டதாக கூட இருக்கலாம். வர்த்தக தொடர்பு வைத்துள்ள நிறுவன கணக்கிலிருந்து தொகை பெறுவதே பாதுகாப்பானது.

நமக்கு நாமே சிறை

---------------'டிஜிட்டல் அரெஸ்ட்' கொடூரம்சமீப நாட்களாக, 'டிஜிட்டல் அரெஸ்ட்' டிரென்டிங் ஆகிவருகிறது. மொபைல் போனுக்கு போலீஸ் போலவே அழைப்பர். உங்கள் பெயரில் தைவான் நாட்டுக்கு கூரியர் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 300 கிராம் அளவு போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆதார் எண் விவரங்களை சொல்லுங்கள் என கேட்பர். கூடவே, உங்கள் வங்கி கணக்கில் சந்தேகத்துக்கு இடமான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. உங்களிடம் விசாரணை செய்யவேண்டும். அருகில் யாரும் இருக்கக்கூடாது; யாரிடமும் பேசக்கூடாது. வீடியோ அழைப்பை துண்டிக்கக்கூடாது எனக்கூறி, தனி அறைக்குள் பலமணி நேரம் வரை அடைத்துவைக்கச் செய்வர். 15 முதல் 80 லட்சம் ரூபாய் வரை அனுப்பிவைக்குமாறு கோருவர்; விசாரணையில் நீங்கள் குற்றவாளி இல்லையென நிரூபணமானால் தொகை திருப்பி அனுப்பப்பட்டுவிடும் என்பர். இதை நம்பி பயந்து பலரும், கேட்கும் தொகையை மோசடி நபருக்கு அனுப்பிவிடுகின்றனர். இதுபோன்ற ஒரு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை, லுாதியானாவுக்கு சென்று பிடித்துவந்தோம்.சைபர் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதும்; அவர்களிடமிருந்து தொகையை மீட்பதும் அவ்வளவு எளிதான விஷயமல்ல. குற்றவாளி ஒரு நாட்டில் இருப்பான், ஆனால் நெட்வொர்க் ஐ.பி., வேறுநாட்டிலிருக்கும். ஏமாறுவதில், படித்தோர், படிக்காதோர், ஏழை என எந்த பாகுபாடும் இல்லை. இரையை உண்வதற்காக வரும் மீன், துாண்டிலில் சிக்குவதுபோல், ஆசை என்கிற வலையில் சிக்கி பலரும், ஹேக்கர்கள் வலையில் வீழ்ந்துவிடுகின்றனர்.எதோ ஒருவகையில் நாம் இடம் கொடுக்காமல் சைபர் குற்றங்கள் நடைபெறுவதில்லை. எனவே, நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். ஆசை வலையில், துாண்டில் மீனாக சிக்கிக்கொள்ளக்கூடாது.- சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள்.



சபலப்பட்டால் கதை 'காலி'

சைபர் கிரைம் எஸ்.ஐ., ரபீக்:திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களின் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் சர்வர்கள், ஹேக்கர்கள் எளிதில் தாக்குதல் நடத்தும் அளவு, பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளன. லிங்க்கள் மூலம், 'ரான்சம்வேர்' வைரஸை அனுப்பி, கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து தரவுகளையும் கைப்பற்றுகின்றனர். அவற்றை மீட்பதற்கு, லட்சக்கணக்கான ரூபாய் பேரம் பேசி பெறுகின்றனர். தொகையை கொடுத்தாலும், தரவுகளை விடுவிப்பதில்லை. நிறுவன இணையதள பக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்து, ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து, கெட்ட பெயர் ஏற்படுத்துவர்.நிறுவனத்தின் இ-மெயில் முகவரியை 'ஹேக்' செய்து, தயாரித்து அனுப்பிய ஆடைக்கான தொகையை வேறு வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு வர்த்தகருக்கு மெயில் அனுப்பி, பணத்தை சுருட்டிவிடுகின்றனர். ஆடை உற்பத்தியாளர்கள், தங்கள் நிறுவன சர்வர்களை பலப்படுத்த வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, எத்திகல் ஹேக்கர்களின் உதவியை நாடலாம். மொபைல் போன், கம்ப்யூட்டரில் ஆபாச தளங்களுக்குள் செல்வோர், பின்புலத்தில் திருட்டு செயலிகள் தானாக பதிவிறக்கம் செய்யப்படுவதையும்; மொபைலில் உள்ள தகவல்கள் திருடப்பட்டு, ஹேக்கர்களுக்கு அனுப்பப்படுவதையும் அறிவதில்லை.வாட்ஸ் அப்க்கு வீடியோ கால் செய்து, பெண் ஆபாசமாக இருப்பது போன்றும் அதை பார்ப்பது போலவும் ரெக்கார்டு செய்வது; நம்மையும் ஆபாசமாக நிற்கவைத்து, வீடியோ பதிவு செய்து மிரட்டுவது அதிகரித்துவருகிறது. சபலத்தில் தன்னிலை மறப்போர், விபரீதத்தில் சுலபமாக சிக்கிக்கொள்கின்றனர். தொகையை இழப்பது, மிரட்டல்கள் உள்ளிட்ட நெருக்கடியான சூழல்களில், போலீசாரிடம் வந்து, நடந்ததை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தலைகுனிந்து நிற்கின்றனர். மொபைல்போனை முழுமையாக பரிசோதிக்கும்போது, ஆபாச தளத்தை பார்த்ததன் விளைவு என்பது தெரியவரும். குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவால் நிறைந்ததாக மாறிவருகிறது. அதிநவீன நுட்பங்களை பயன்படுத்தினால்தான், குற்றவாளிகளை பிடிக்கமுடிகிறது. எனவே, வரும்முன் காப்போம் என்ற விழிப்புணர்வு நிலையே பாதுகாப்பானது.








      Dinamalar
      Follow us