முழுநேர உழைப்பு... பகுதி நேர ஊதியம்–––––––––––––––––––––––––––––––––– துாய்மைக் காவலர் வாழ்வாதாரம் கேள்விக்குறி
முழுநேர உழைப்பு... பகுதி நேர ஊதியம்–––––––––––––––––––––––––––––––––– துாய்மைக் காவலர் வாழ்வாதாரம் கேள்விக்குறி
ADDED : செப் 10, 2026 07:03 PM
திருப்பூர், செப். 11–
கிராம ஊராட்சிகளில் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணியை மேற்கொள்ளும் துாய்மை காவலர்களுக்கு மாதம் 6,000 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.
தற்போதைய விலைவாசியில் குடும்பத்தை நடத்த முடியாததால், ஊராட்சிப் பணிகளை முடித்துவிட்டு, பனியன் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்களில் பகுதி நேரப் பணிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான ஊராட்சிகளில் ஒன்று அல்லது இரண்டு துாய்மை காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளதால், ஒருவர் விடுப்பில் சென்றாலும் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் குப்பைகள் தேங்கி, துர்நாற்றம் மற்றும் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது.
சி.ஐ.டி.யு., மாவட்ட செயலர் ரங்கராஜ் கூறியதாவது:
துாய்மை காவலர்கள் காலை 7:00 மணி முதல் மதியம் 2:00 அல்லது 3:00 மணி வரை முழுநேரம் பணியாற்றுகின்றனர். எனினும், அரசு இவர்களை பகுதி நேரப் பணியாளர்களாக வகைப்படுத்தியுள்ளது. விதிகளின்படி மாதம் 12,817 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டிய நிலையில், 6,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. துாய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோகிப்பாளர்கள் முழுநேர பணியாளர்களே என ஐகோர்ட் உத்தரவிட்டும், அதை அமல்படுத்தாமல் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. துாய்மை காவலர்களை முழுநேர பணியாளர்களாக அங்கீகரித்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். துாய்மை காவலர் பணிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்
