/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதிஷ்டைக்காக விநாயகர் சிலைகள் பயணம்
/
பிரதிஷ்டைக்காக விநாயகர் சிலைகள் பயணம்
ADDED : ஆக 22, 2025 11:57 PM

பொங்கலுார்:வரும் 27-ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொங்கலுார் ஆலாம்பாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பல மாதங்களாக தயார் செய்யப்பட்டு வந்தது. இறுதிக்கட்ட வர்ணம் பூசும் பணி நடந்து வந்தது. வெளியூரை சேர்ந்த பல தொழிலாளர்கள் அங்கேயே தங்கி இரவு பகலாக சிலை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தாண்டு ராஜ அலங்காரம், புல்லட் விநாயகர், ரத விநாயகர், சகோதர விநாயகர், ஜல்லிக்கட்டு விநாயகர், அனுமன் விநாயகர், ஏவுகணை விநாயகர், பாம்பு விநாயகர், சிவன் விநாயகர், கிருஷ்ணருடன் இருக்கும் விநாயகர், கருடன் விநாயகர், மயில் விநாயகர், மூஞ்சூறு விநாயகர், அன்னம் விநாயகர் என பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் மூன்று அடி முதல், 11 அடி வரை உயரம் கொண்டது.
விநாயகர் சதுர்த்தி நெருங்கியதால், பொங்கலுார், பல்லடம், அவிநாசி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தங்கள் ஊரில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்காக பொதுமக்கள், ஹிந்து முன்னணியினர் பலரும் நேற்று காலை முதலே ஆலாம்பாளையத்திற்கு வந்தனர்.
ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகர் சிலைகளை தங்கள் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.