/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தந்தை - மகனை வெட்டிய 'கஞ்சா' கும்பல்; போலீசில் புகார் அளித்ததால் வெறிச்செயல்
/
தந்தை - மகனை வெட்டிய 'கஞ்சா' கும்பல்; போலீசில் புகார் அளித்ததால் வெறிச்செயல்
தந்தை - மகனை வெட்டிய 'கஞ்சா' கும்பல்; போலீசில் புகார் அளித்ததால் வெறிச்செயல்
தந்தை - மகனை வெட்டிய 'கஞ்சா' கும்பல்; போலீசில் புகார் அளித்ததால் வெறிச்செயல்
ADDED : மார் 25, 2025 07:11 AM

திருப்பூர்; திருப்பூரில், கடையின் பூட்டு உடைக்க முயன்றதை தட்டிக் கேட்டு, போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த போதை கும்பல், தந்தை, மகன் இருவரையும் பட்டாக்கத்தியால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், வீரபாண்டி, முருகம்பாளையம் - அண்ணா நகரைச் சேர்ந்தவர் முருகேசன், 55. அவரது மகன் அரவிந்தன், 25. திருப்பூர் மாநகராட்சியில் தற்காலிகமாக பொறியியல் பிரிவில் பணியாற்றுகிறார்.
கடந்த, 22ம் தேதி இரவு முருகேசன் வீட்டுக்கு அருகேயுள்ள ஒரு கடையின் பூட்டு உடைக்கும் முயற்சியில் அதே பகுதியில் வசிக்கும் சிலர் ஈடுபட்டனர். சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினரை போதையில் இருந்த கும்பல் மிரட்டியது.
தகவல் அளிக்கப்பட்டு ரோந்து போலீசார் சென்றனர். நடந்தது குறித்து விசாரித்து விட்டு, போதையில் இருந்ததால், அந்த கும்பலுக்கு எச்சரிக்கை விடுத்து, காலையில் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறி சென்றனர்.
நேற்று முன்தினம் காலை, கடை உரிமையாளர் மற்றும் அருகிலிருந்தோர் வீரபாண்டி போலீசாரிடம், இது குறித்து புகார் அளித்தனர். போலீசாரும், போதை கும்பலிடம் விசாரிப்பதாக கூறினர்.
புகார் கொடுத்ததால், ஆத்திரமடைந்த அக்கும்பல் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில், முருகேசன் வீட்டுக்கு சென்றது. அங்கு நின்றிருந்த அரவிந்தனை பட்டாக்கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியது. தடுக்க வந்த முருகேசனுக்கும் வெட்டு விழுந்தது.
அதன்பின், அந்த ரோட்டில் சாவகாசமாக கையில், பட்டாக்கத்தியுடன் நடந்து சென்றனர். அருகிலிருந்தோர், தந்தை - மகன் இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கருத்தபாண்டி, 24, லலித்குமார், 24, ஸ்டீபன்ராஜ், 19, அகிலன், 27 மற்றும் முத்து பாலாஜி, 23 ஆகிய ஐந்து பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து., 2.5 அடி நீளமுள்ள பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
அப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறியதாவது:
தந்தை, மகனை வெட்டிய கும்பலில் உள்ள இளைஞர்கள் எந்த வேலைக்கும் செல்வதில்லை. எந்நேரமும் கஞ்சா மற்றும் மது போதையில், ஏரியாவிலேயே சுற்றி கொண்டிருப்பர். சனிக்கிழமை இரவு, மளிகை கடையின் பூட்டு உடைப்பதை, அரவிந்தனின் தாய் மற்றும் சிலர் தடுத்தனர். அதற்குள் தகவல் தெரிந்து போலீசார் வந்ததும், காலையில் இரு தரப்பையும் வருமாறு கூறி சென்று விட்டனர்.
நாங்களும் ஞாயிறன்று ஸ்டேஷன் சென்று புகார் கொடுத்தோம். அந்த ஆத்திரத்தில் தான், இருவரை வெட்டினர். முதல் நாள் சம்பவம் நடந்த போதோ, போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்காது. அந்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.