ADDED : செப் 28, 2026 09:05 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளில் டெங்கு பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சில ஊராட்சிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் முறையாக நடைபெறுவதில்லை எனவும், இதனால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். டெங்கு அச்சம் அதிகரித்து வரும் நிலையில், ஊராட்சி நிர்வாகங்கள் சுகாதாரப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதேபோல், பொது இடங்களில் குப்பை கொட்டுவதைத் தவிர்க்கும் வகையில், கிராம ஊராட்சிகளில் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில், பொதுமக்களிடமிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை உள்ளிட்ட 4 வகைகளாக தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள், துாய்மைப் பணியாளர்களால் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு வந்தன.
தற்போது, ஊராட்சிகளில் நிலவும் துாய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறையால், இத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் மீண்டும் பழையபடியே குப்பைகளை ஒட்டுமொத்தமாக ஒரே வாகனத்தில் அள்ளிச் செல்லும் நிலை நீடிக்கிறது.
கிராம ஊராட்சிகளில் குப்பையில்லா சூழலை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, குப்பை சேகரிப்புத் திட்டத்தில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்கும் தீர்வு காண வேண்டும்.
