/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதியில் நிறுத்தப்பட்ட குப்பை கிடங்கு அகற்றும் பணி நிலத்தை மீட்பதில் அலட்சியம்; மக்கள் அதிருப்தி
/
பாதியில் நிறுத்தப்பட்ட குப்பை கிடங்கு அகற்றும் பணி நிலத்தை மீட்பதில் அலட்சியம்; மக்கள் அதிருப்தி
பாதியில் நிறுத்தப்பட்ட குப்பை கிடங்கு அகற்றும் பணி நிலத்தை மீட்பதில் அலட்சியம்; மக்கள் அதிருப்தி
பாதியில் நிறுத்தப்பட்ட குப்பை கிடங்கு அகற்றும் பணி நிலத்தை மீட்பதில் அலட்சியம்; மக்கள் அதிருப்தி
ADDED : டிச 08, 2025 05:43 AM
உடுமலை: உடுமலை நகராட்சி பழைய குப்பை கிடங்கில் 'பயோ மைனிங்' முறையில் கழிவுகள் அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இப்பணியை முழுமையாக முடித்து, பயனுள்ள வகையில் மாற்ற வேண்டும், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை -- தாராபுரம் ரோட்டில், நகராட்சிக்கு சொந்தமான, 6.5 ஏக்கர் பரப்பில், 60 ஆண்டுகளாக பயன்படுத்திய குப்பை கிடங்கு உள்ளது. இதனை சுற்றிலும், காந்திநகர்-2, புஷ்பகிரி வேலன் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் தொடர் போராட்டம் காரணமாக, 25 ஆண்டுக்கு முன், கணபதிபாளையத்திற்கு குப்பை கிடங்கு மாற்றப்பட்டு, அங்கும் மூடப்பட்டது.
தற்போது, நகராட்சியில் சேகரமாகும் குப்பை, நுண் உரக்குடில்கள் வாயிலாக உரமாக மாற்றப்படுவதோடு, மக்காத கழிவுகள் மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், பழைய குப்பைக்கிடங்கில் கழிவுகள் அகற்றப்படாமல், பல அடி உயரத்திற்கு தேங்கி, சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின், நகராட்சி சார்பில், இங்குள்ள, 19 ஆயிரம் டன் கழிவுகள், 'பயோ மைனிங்' முறையில், ரூ.2.13 கோடியில் அகற்றும் பணி கடந்த ஆறு மாதத்திற்கு முன் துவங்கியது.
தேங்கியிருந்த கழிவுகள் நவீன இயந்திரங்கள் வாயிலாக, பிளாஸ்டிக், இரும்பு, மண் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பை அரைக்கப்பட்டு உரமாக மாற்றப்பட்டு, மற்ற பொருட்கள் மாற்று பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஒரு சில மாதங்கள் பணிகள் முறையாக நடந்த நிலையில், கழிவுகள் முறையாக பிரிக்கப்படாமல், அப்படியே லாரிகளில் ஏற்றி, நான்கு வழிச்சாலை ஓரத்திலுள்ள விவசாய நிலங்களில் கொட்டப்பட்டது. இதனால், விவசாய நிலங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த சில மாதமாக, கழிவுகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் ஒரு புறம் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.நகராட்சி குப்பை கிடங்கிற்கு அருகிலுள்ள இடத்தில், பெரியகோட்டை ஊராட்சியில் சேகரமாகும், குப்பை, இறைச்சி, பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு, சுகாதார கேடு ஏற்படுகிறது. குவிக்கப்பட்டுள்ள குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கிறது.
எனவே, நகராட்சி குப்பை கிடங்கில், பயோமைனிங் முறையில் கழிவு அகற்றும் பணியை மீண்டும் துவங்க வேண்டும். இதனை நகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். சுற்றிலும், சுற்றுச்சுவர் அமைக்கவும், மீண்டும் கழிவுகள் கொட்டும் மையமாக மாற்றுவதை தடுக்க வேண்டும்.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை பயன்படுத்தும் வகையிலும், மாற்றுத்திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும்.
இங்கு, செம்மொழி பூங்கா, நடை பயிற்சி மையம், திறந்தவெளி வர்த்தக மையம், பூ மார்க்கெட், வணிக வளாகம், அரசு அலுவலகங்களுக்கு ஒதுக்கீடு என, நகராட்சி, அரசுக்கு வருவாய் வரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து, குடியிருப்போர் நல சங்கம் சார்பில், தமிழக முதல்வர், நகராட்சி நிர்வாக கமிஷனர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

