
பல்லடம்:பல்லடத்தில், குப்பைக்கு வைத்த தீயால், தென்னை மரங்கள் சேதமடைந்தது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைப் பகுதியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு, ஒன்பதாம் பள்ளம், பச்சாபாளையம் குட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து இருந்த சீமை கருவேல மரங்கள் நேற்று முன்தினம் அகற்றப்பட்டன.
வெட்டப்பட்ட சீமை கருவேல மரங்களின் பாகங்களுக்கு கூலி தொழிலாளர்கள் தீ வைத்தனர். விவசாய நிலம் அருகே தீ வைக்கப்பட்ட நிலையில், அருகில் இருந்த தென்னை மரங்கள் சில தீயில் கருகி சேதமடைந்தன.
விவசாயிகள் கூறுகையில், 'சீமை கருவேல மரங்கள் அகற்றிய பின் அவற்றை ஒதுக்குப்புறமாக தீ வைத்து எரித்திருக்க வேண்டும்.
ஆனால், விவசாய நிலங்கள் அருகே குவித்து வைத்து தீ வைக்கப்பட்டதால், அருகில் இருந்த சில தென்னை மரங்கள் தீயில் கருகின.
ஏற்கனவே, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மரங்கள் கருகி வரும் நிலையில், குப்பைகளுக்கு தீ வைத்ததால், சில தென்னைகள் தீயில் கருகி சேதம் அடைந்தன.
தீயில் கருகிய தென்னை மரங்கள் மீண்டும் துளிர் விடுமா என்ற சந்தேகம் உள்ளது,' என்றனர்.

