ADDED : ஆக 23, 2026 05:04 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் தினமும் சேகரமாகும் 850 மெட்ரிக் டன் குப்பைகளைத் தரம் பிரித்து அகற்றுவதில் நிர்வாகம் கடுமையாகத் தடுமாறி வருகிறது. இதனால் நகர வீதிகள் மற்றும் காலியிடங்களில் கழிவுகள் தேங்கி, மீண்டும் குப்பை விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சேகரிக்கப்படும் உலர் கழிவுகள், இறைச்சி மற்றும் காய்கறி கழிவுகள் முறையே மின் உற்பத்தி, தீவனம் மற்றும் உரப் பயன்பாட்டிற்கு அனுப்பப்பட்டாலும், பெருமளவு சேகரமாகும் தரம் பிரிக்கப்படாத குப்பைகளைக் கையாளுவதில் சிக்கல் நீடிக்கிறது.
4 மண்டல மையங்களிலும் பல்லாயிரம் டன் குப்பைகள் தேங்கிக்கிடக்கின்றன. போதுமான இயந்திரங்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாததே இதற்குக் காரணம்.
காலேஜ் ரோட்டில், நொய்யல் ஆற்றுக்குச் செல்லும் ஓடையை ஒட்டி அமைக்கப்பட்ட குப்பைக் கிடங்கு அண்மையில் பெய்த மழையால் மிதக்கிறது. அதிலிருந்து வடிந்து செல்லும் கழிவுநீர் நொய்யல் ஆற்றை நோக்கிப் பாயும் சூழல் உருவாகியுள்ளதுடன், கிடங்கை ஒட்டியுள்ள நீர்வழிப் பாதையில் மழைநீர் 3 அடி உயரத்திற்குத் தேங்கி நிற்கிறது.
நகரின் காலியிடங்கள், பொதுப் பாதைகள் மற்றும் நீர்வழிப் பாதை ஓரங்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
பல்லடம் அருகே குப்பைத் தரம் பிரிக்கும் மையம் அமைக்கும் திட்டத்திற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அத்திட்டமும் கைவிடப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்நிலை தொடர்ந்தால் திருப்பூர் முழுமையாகக் 'குப்பை மாநகரமாக' மாறும் என அச்சம் எழுந்துள்ளது.
