/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை விவகாரம்; இன்று கடையடைப்பு
/
குப்பை விவகாரம்; இன்று கடையடைப்பு
ADDED : அக் 28, 2025 12:19 AM
பல்லடம்: திருப்பூர் அருகே, இடுவாய், சின்னக்காளிபாளையம் கிராமத்தில், திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்கான முதல் கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், விவசாயிகள் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்ட பொதுமக்கள், சட்டப் போராட்டத்துடன், மக்கள் போராட்டத்தையும் மேற்கொள்ள தீர்மானித்தனர்.
இதன்படி, இடுவாய், ஆறுமுத்தாம்பாளையம், 63 வேலம்பாளையம், கரைப்புதுார் ஆகிய ஊராட்சிகள் உட்பட, திருப்பூர் மாநகராட்சி, 58, 60வது வார்டுக்கு உட்பட்ட இடுவம்பாளையம் கிராமத்திலும் இன்று முழுமையான கடையடைப்பு நடத்த பொதுமக்கள் தீர்மானித்துள்ளனர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து, நான்கு ஊராட்சிகள் மற்றும் இடுவம்பாளையம் கிராமம் ஆகியவற்றில் இன்று முழுமையான கடையடைப்பு நடக்கிறது.
இந்தப் போராட்டத்துக்கு, விசைத்தறி உரிமையாளர்கள், கல்குவாரி கிரஷர், நிறுவனங்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மக்களைத் திரட்டி நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு இடையே, சட்டப் போராட்டத்தையும் சந்திக்கும் விதமாக, இன்று (நேற்று) சென்னை ஐகோர்ட்டில் இந்த விவகாரம் தொடர்பாக மனுதாக்கலும் செய்யப்பட்டுள்ளது.
பி.ஏ.பி., பாசன சபை, குடியிருப்போர் நலச் சங்கம், விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் என, நான்கு விதமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடையடைப்பு போராட்டத்தை தொடர்ந்து, அடுத்த கட்ட போராட்டமும் விரைவில் அறிவிக்கப்படும். விவசாயிகள், பொதுமக்களுடன் இது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

