/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாப்பில் குப்பை பயணியர் முகம் சுழிப்பு
/
பஸ் ஸ்டாப்பில் குப்பை பயணியர் முகம் சுழிப்பு
ADDED : நவ 14, 2024 04:31 AM

உடுமலை: உடுமலை நகர எல்லையையொட்டியுள்ள போடிபட்டி ஊராட்சி, மக்கள் தொகை அதிகமுள்ள கிராமங்களில் ஒன்றாக உள்ளது.
உடுமலையிலிருந்து தளி ரோடு வழியாக, திருமூர்த்தி, அமராவதி மற்றும் மூணார் வரை செல்லும் அனைத்து பஸ்களும், போடிபட்டி வழியாகவே இயக்கப்படுகின்றன.
நாள்தோறும் போடிபட்டியிலிருந்து உடுமலை நகருக்கு மாணவர்கள், பணிக்கு செல்வோர் என பலரும், பஸ் பயணம் செய்கின்றனர்.
நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பயணியர் பயன்படுத்தும், பஸ் ஸ்டாப்பில் இருக்கை வசதி, நிழற்கூரை என எதுவும் போடிபட்டியில் அமைக்கப்படவில்லை. ஏற்கனவே இருக்கும் நிழற்கூரை, இருக்கைகளும் சிதிலமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இந்நிலையில், தற்போது பயணியர் பஸ் ஸ்டாப்பில் நின்று காத்திருப்பதற்கும் முடியாமல், ஊராட்சியின் குப்பைக்கழிவுகள் மொத்தமும், அப்பகுதியில் தான் கொட்டப்படுகின்றன. மூட்டைகளாக கழிவுகள் தொடர்ந்து அங்கு குவிந்து கிடக்கிறது. இதனால் மிகுதியான துர்நாற்றமும் பரவுகிறது.
குப்பைக்கழிவுகளை தோண்டுவதற்கு, தெருநாய்களும் பஸ் ஸ்டாப் அருகில் கூட்டமாக வருவதால், பயணியர் அச்சத்துக்குள்ளாகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம் கழிவுகளை அப்புறப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் கொட்டாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

