/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை பிரச்னை: நிரந்தர தீர்வு சாத்தியமாகுமா?
/
குப்பை பிரச்னை: நிரந்தர தீர்வு சாத்தியமாகுமா?
ADDED : நவ 01, 2025 12:20 AM

திருப்பூரில் திடக்கழிவு மேலாண்மையில் நிலவும் பிரச்னைகள், மாநகராட்சி நிர்வாகத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வு விரைந்து ஏற்படுத்தப்பட வேண்டும்.
பாறைக்குழயில் கொட்ட எதிர்ப்பு : தீர்வுக்கு முனைகிறது மாநகராட்சி
திருப்பூர் மாநகராட்சி 160 சதுர கி.மீ., பரப்பளவில் ஏறத்தாழ 14 லட்சம் மக்கள் தொகையுடன் உள்ளது. நான்கு மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியின் கணக்குப்படி தினமும் 260 டன் ஈரக் கழிவு; 320 டன் உலர் கழிவு என மொத்தம் 580 டன் குப்பை சேகரமாகிறது. இருப்பினும் இது 800 டன் வரை உள்ளது.
இதை அகற்றும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஒப்பந்த நிபந்தனைப்படி 2,197 துாய்மைப் பணியாளர்கள், 110 மேற்பார்வையாளர்கள், 208 டிரைவர்கள், 114 இலகு ரக மற்றும் 12 கனரக வாகனங்கள், 10 காம்பாக்டர்களும் இதில் ஈடுபட்டுள்ளன. இதற்காக டன் ஒன்றுக்கு 3,851 ரூபாய் வழங்கப்படுகிறது.
மாநகராட்சியில் உள்ள 28 நுண் உரமாக்கல் மையங்களில் தலா 5 டன் வீதம் தினமும் 140 டன் மக்கும் கழிவுகள் உரமாக மாற்றப்படுகிறது. உயிரி எரிவாயு மையம் மூலம் 10 டன் மக்கும் கழிவு எரிவாயுவாக மாற்றப்படுகிறது. இங்குள்ள 6 உலர் கழிவு மறுசுழற்சி மையங்களில் தினமும் 30 டன் அளவு உலர் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
மீதமுள்ள கழிவுகள் மேலாண்மை செய்ய உரிய தொழில்நுட்ப மற்றும் இட வசதி இல்லை என்பதால், பயன்பாடற்ற, கைவிடப்பட்ட பாறைக்குழிகளில் கொட்டி, மண் கொண்டு மூடி சமன் செய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இது போன்ற பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் மேலும் சில நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி இதற்கான தீர்வுகளுக்கு திட்டமிட்டு வருகிறது.
மாநகரத் துாய்மைப் பணி மக்கள் இயக்கமாகட்டும்
அனைத்து வீடுகளிலும், 100 சதவீதம் குப்பை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிப்பது; பொதுமக்கள் மத்தியில் மாணவர்கள் மற்றும் துாய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. மக்கும் கழிவுகள் வாரம் முழுவதும் சேகரிப்பதோடு, மக்காத குப்பைகள் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் பெறுவது; பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்புவது. குப்பைகளை துாய்மைப் பணியாளர்களிடம் வாகனங்களில் மட்டுமே வழங்க வேண்டும். வெளியிடங்களில் எங்கும் குப்பை கொட்டுவது தடுக்கப்படும். மீறும் பட்சத்தில் விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும். பகுதி வாரியாக அதிகம் குப்பை குவியும் இடங்கள் கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்வது; அந்த இடங்களில் செடிகள் வளர்ப்பது; எந்த பகுதியிலும் குப்பைத் தொட்டியே இல்லாத வகையில் நடவடிக்கை எடுப்பது. இரண்டு வார்டுகளுக்கு ஒரு பரப்புரையாளர் நியமித்து வீடு வீடாகச் சென்று குப்பை தரம் பிரித்து வழங்குவது குறித்து விளக்குவது போன்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு இதைச் செயல்படுத்தவும் முனைப்பு காட்டப்படுகிறது.
நகர துாய்மையை மக்கள் இயக்கமாக மாற்றுவது; மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்கள் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் மக்களை இணைத்து துாய்மைப் பணி மேற்கொள்வது.
100 கிலோ கழிவுகள் சேகரமாகும் நிறுவனங்களுக்கு தேவை அக்கறை
அனைத்து வார்டுகளிலும், உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் கணக்கெடுத்து அவற்றில் சேகரமாகும், மக்கும் மற்றும் மக்காத கழிவுகள் தனியாக சேகரிக்கப்படும்.நிறுவனங்களில் இருத்து சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகள் நுண் உரமாக்கல் மைய மேலாண்மை செய்யப்பட்டு உரமாக மாற்றப்படும்.ஐந்தாயிரம் சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட அல்லது தினமும் 100 கிலோவுக்கு மேல் குப்பை உற்பத்தியாகும் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு வளாகங்கள், உணவகங்கள், விடுதிகள், தொழிற்பேட்டைகள் உள்ளிட்ட அனைத்தும் பல்க் வேஸ்ட் ஜெனரேசன் என்ற வகையில் கொண்டு வருவது; அவற்றுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி அளிப்பது; இதை செய்ய இயலாத நிறுவனங்களிடம் உரிய கட்டணம் பெற்று கழிவுகளை பெற்றுக்கொள்வது.
மீன் மற்றும் கோழி இறைச்சிக் கழிவுகளை சேகரித்து மேலாண்மை செய்ய ஒப்பந்ததாரர்கள் நியமித்து அவர்கள் சேகரிப்பது; இறைச்சி கழிவுகளை தன்னிச்சையாக வெளியே கொட்டாமல், உரிய ஒப்பந்த நிறுவனத்திடம் வழங்குவது குறித்து இறைச்சிகடைகளுக்கு அறிவுறுத்துவது;
திடக்கழிவு மேலாண்மை குறித்த புகார் மற்றும் ஆலோசனை தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண் வழங்குவது உள்ளிட்ட யோசனைகள் முக்கியமானவை.
ேஹாட்டல் கழிவுகள் 200 டன் பயோ காஸ் ஆக மாற்றப்படும்
மார்க்கெட் மற்றும் ஓட்டல்களில் சேகரமாகும் 200 டன் ஈரக்கழிவுகள் பயோ காஸ் ஆக மாற்றப்படும். இதற்காக 58 கோடி ரூபாய் மதிப்பில் மையம் அமைக்க அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இடம் தேர்வு ஆகியன முடிந்து பணிகள் விரைவில் துவங்கவுள்ளது.
உலர் கழிவுகள் கோவை மாநகராட்சியுடன் இணைந்து கையாளும் வகையில், 200 டன் திறனில் எரிசக்தி உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை டாடா கன்சல்டிங் நிறுவனம்மேற்கொண்டுள்ளது.
நுண் உர உற்பத்தி மையங்களில் தற்போது பழுதான 12 இயந்திரங்கள் சரி செய்யவும், மேலும் 13 இயந்திரங்கள் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீடுகள், பூங்காக்கள். தோட்டங்கள், சாலையோர பூங்காக்கள் ஆகிய இடங்களில் உருவாகும் தோட்டக் கழிவுகளை அரைத்து மேலாண்மை செய்ய அரவை இயந்திரம் வாங்கப்படும்.
குடியிருப்பு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெரு நிறுவன சமூகப் பொறுப்பு நிதி மூலம், குப்பைகளை தரம் பிரித்து வழங்க தேவையான குப்பைக் கூடைகள் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

