/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யலாற்றில் குப்பை பேரூராட்சி எச்சரிக்கை
/
நொய்யலாற்றில் குப்பை பேரூராட்சி எச்சரிக்கை
ADDED : ஜன 02, 2026 05:41 AM

திருப்பூர்: நொய்யல் ஆற்றில் குப்பை கழிவுகளை கொட்டக்கூடாது என, சாமளாபுரம் பேரூராட்சி எச்சரிக்கை பலகை அமைத்துள்ளது.
கோவைமாவட்டத்தில் துவங்கும் நொய்யல் ஆறு, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து சென்று காவிரியில் கலக்கிறது. இந்த ஆற்றின் கரையில், பெரும்பாலான இடங்களில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. கரையோரம் உள்ள தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியேற்றப்படும் கழிவு நீர் நொய்யல் ஆற்றினுள் சென்று கலக்கிறது.
இது போன்ற செயல்களால் நொய்யல் ஆறு மாசடைகிறது. குப்பைகழிவுகளை ஆற்றோரம் கொட்டுவதால் மேலும் ஆறு சீரழிகிறது. இதனை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நொய்யல் பாதுகாப்பு இயக்கம் சார்பில், பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவ்வகையில் சாமளாபுரம் பகுதியில், நொய்யல் கரையோரம், 'குப்பை கொட்டக் கூடாது' என எச்சரிக்கும் பேனர்கள் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நொய்யல் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் கூறுகையில், 'நொய்யல் ஆற்றில் குப்பை கொட்டக்கூடாது என எச்சரிக்கை விடுப்பதோடு மட்டும் நின்று விடாமல் உரிய கண்காணிப்பையும் மேற்கொள்ள வேண்டும். சில இடங்களில் பேரூராட்சி துாய்மைப் பணியாளர்களே ஆற்றினுள் குப்பையை கொட்டிச் செல்கின்றனர். இது போன்ற செயல் கண்டிப்பாக தடுக்க வேண்டும்', என்றார்.

