/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆங்கில புத்தாண்டில் அமைதியாக கொண்டாட்டம்
/
ஆங்கில புத்தாண்டில் அமைதியாக கொண்டாட்டம்
ADDED : ஜன 02, 2026 05:41 AM

திருப்பூர்: திருப்பூரில், புத்தாண்டை வரவேற்று பொதுமக்கள் கேக் வெட்டி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக, 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆங்கிலப் புத்தாண்டு, 2026ம் ஆண்டு பிறப்பை கொண்டாட, திருப்பூர் மாநகரில் நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் பலரும் ஆயத்தமாகினர். பனியன் நிறுவனங்கள், குடியிருப்பு பகுதியில் வாலிபர்கள், பொதுமக்கள் என பலரும் ஆட்டம்பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்று, கேக் வெட்டி மகிழ்ந்தனர். இவ்வாண்டு, புத்தாண்டை விபத்தில்லா ஆண்டாக வரவேற்க வேண்டும் மற்றும் பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாடப்பட வேண்டும் என்று மாநகர போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, மாநகரம் முழுதும் மாலை முதலே தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். வழக்கமான போலீஸ் செக்போஸ்ட்டுகளை தவிர்த்து, ஒவ்வொரு ஸ்டேஷன் பகுதியில், நான்கு இடம் என, மொத்தம், 36 இடங்களில் தற்காலிக வாகன தணிக்கையில் குழுவாக போலீசார் ஈடுபட்டனர்.
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வகையில், நான்கு கார் உட்பட, 43 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் டூவீலர் இயக்கிய, 123 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. போலீசாரின் தீவிர கண்காணிப்பு காரணமாக, எவ்வித அசம்பாவிதங்கள், விபத்து இல்லாமல், ஆங்கில புத்தாண்டை மக்கள் கொண்டாடினர்.

