/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை லாரி சிறைப்பிடிப்பு; 105 பேர் கைது
/
குப்பை லாரி சிறைப்பிடிப்பு; 105 பேர் கைது
ADDED : ஜூலை 01, 2025 11:45 PM

அனுப்பர்பாளையம்; -திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் நெருப்பெரிச்சல் ஜி.என்., கார் டன் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள தனியார் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு கொட்டப்படும் குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருக்க முடியவில்லை. எனவே, எங்கள் பகுதியில் குப்பை கொட்ட கூடாது, என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த வாரம் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும், தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வந்தது. இதனால், குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, நேற்று ஜி.என்., கார்டன் பகுதியிலுள்ள கடைகள், பத்திர எழுத்தர் அலுவலகங்கள் அடைக்கப்பட்டன.
தொடர்ந்து, அனைத்து கட்சியினர் பொதுமக்கள் மற்றும் பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் என, 500 பேர் நெருப்பெரிச்சல் பஸ் ஸ்டாப் அருகில்ஒன்று திரண்டு, மாநகராட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, குப்பை லாரி ஒன்று வர அதனை சிறைப்பிடித்து ரோட்டில் அமர்ந்து கொண்டனர். இதனால் ரிங் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 105 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதன்பின், மீண்டும் குப்பை கொட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதையறிந்த பொதுமக்கள் அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.