/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பையோடு குப்பையாக 'பேட்டரி' வாகனங்கள்
/
குப்பையோடு குப்பையாக 'பேட்டரி' வாகனங்கள்
ADDED : பிப் 08, 2024 06:29 AM

திருப்பூர் : தரம் உயர்த்தப்பட்ட திருமுருகன்பூண்டி நகராட்சியில், குப்பை அள்ளுவதற்காக வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள், பயன்படுத்த தகுதியற்ற நிலையில், குப்பையோடு குப்பையாக கிடக்கின்றன.
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி பேரூராட்சி கடந்தாண்டு, இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, சில மாதங்களில் முதல் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டது. வீடு, வீடாக சேகரிக்கப்படும் குப்பைகளை அள்ளிச் செல்ல, பல லட்சம் ரூபாய் செலவில், பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டன.சில மாத பயன்பாட்டுக்கு பின், பேட்டரி வாகனங்கள் பழுதாகின.
அவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால், குப்பைக்கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரு சில பேட்டரி வாகனங்கள் உடைந்து, குப்பையோடு குப்பையாக கிடக்கின்றன. அரசின் பல லட்சம் ரூபாய் நிதி, வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால், வார்டுகளில் குப்பைகளை அள்ளும் பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது; ஆங்காங்கே குப்பைகள் தேங்கிக்கிடக்கின்றன என, பொதுமக்கள் கூறுகின்றனர்.
துாய்மைப் பணியாளர்கள் சிலர் கூறுகையில், 'புதிதாக வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள், மிகவும் இலகுவாக உள்ளன; லேசான குழியில் ஏற்றி, இறக்கினால் கூட, வாகனம் தாக்குப்பிடிப்பதில்லை; பேட்டரி செயல்பாடும் திருப்திகரமாக இல்லை,' என்றனர்.

