/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காஸ் டேங்கர் விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு
/
காஸ் டேங்கர் விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு
ADDED : ஜன 11, 2025 10:42 PM

உடுமலை:திருப்பூர் மாவட்டம், பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், நேற்று காலை, 7:30 மணிக்கு, பாலக்காட்டில் இருந்து மதுரைக்கு, 18 டன் இன்டேன் காஸ் ஏற்றிய டேங்கர் லாரி சென்றது.
நாமக்கல்லை சேர்ந்த மாதேஸ்வரன், 40, ஒட்டி சென்றார். உடுமலை அடுத்த மடத்துக்குளம், கழுகரை பைபாஸ் பகுதியின் அருகே சென்றபோது, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க டிரைவர் லாரியை திருப்பினார்.
அப்போது, டேங்கர் லாரி நிலை தடுமாறி சாலையின் மையத்தடுப்பில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில், லாரியின் முன்பக்க கண்ணாடியும், மின்விளக்கு கம்பமும் சேதமடைந்தது.
மடத்துக்குளம் போலீசார், உடுமலை தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மீட்பு வாகனம் வாயிலாக, காலை, 11:30 மணிக்கு, காஸ் டேங்கர் லாரியை மீட்டு, மதுரைக்கு அனுப்பினர். சுற்றிலும் ஏராளமான கிராமங்கள், விவசாய நிலங்கள் உள்ள நிலையில், காஸ் கசிவு இல்லாததால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

