/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூலி உயர்வு பெற்றுத்தர வேண்டும்; அரசிடம் விசைத்தறியாளர் முறையீடு
/
கூலி உயர்வு பெற்றுத்தர வேண்டும்; அரசிடம் விசைத்தறியாளர் முறையீடு
கூலி உயர்வு பெற்றுத்தர வேண்டும்; அரசிடம் விசைத்தறியாளர் முறையீடு
கூலி உயர்வு பெற்றுத்தர வேண்டும்; அரசிடம் விசைத்தறியாளர் முறையீடு
ADDED : டிச 20, 2024 11:49 PM
பல்லடம்; ''கூலி உயர்வு பெற்றுத்தர தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, பல்லடம் அருகே நடந்த விசைத்தறி கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம், பல்லடம் அருகே, தேவராயம்பாளையம் கிராமத்தில் நேற்று நடந்தது. சோமனுார் சங்கத் தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார்.
அவிநாசி சங்கத் தலைவர் முத்துசாமி, செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மின் கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, 2022 ஒப்பந்த கூலி உயர்வுடன், புதிய கூலி உயர்வு பெற்றுத் தந்து விசைத்தறி தொழிலை பாதுகாக்க தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, மாவட்ட அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிடப்படும். சாதா விசைத்தறிகளுக்கு உண்டான '3ஏ2' கட்டணத்துக்கு ஆண்டுதோறும், 6 சதவீத மின்கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
சாதா விசைத்தறிக்கூடங்களுக்கு வரி உயர்வு செய்வதை நிறுத்தி முழுமையான வரி விலக்கு அளிக்க வேண்டும். சோலார் மின் உற்பத்திக்கு, 100 சதவீத மானியம் அளித்து அழிவுப் பாதையில் உள்ள விசைத்தறி தொழிலை காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தெக்கலுார், புதுப்பாளையம், அவிநாசி, சோமனுார் விசைத்தறி சங்க நிர்வாகிகள் பொன்னுசாமி, ஆறுமுகம், நடராஜ், ராமசாமி, துரைசாமி, குப்புசாமி, ஈஸ்வரன், வெற்றிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.