/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடுது வெப்பம்; குறையுது உற்பத்தி! புழு வளர்ப்பு மனைகளில் பட்டுக்கூடுகள்..
/
கூடுது வெப்பம்; குறையுது உற்பத்தி! புழு வளர்ப்பு மனைகளில் பட்டுக்கூடுகள்..
கூடுது வெப்பம்; குறையுது உற்பத்தி! புழு வளர்ப்பு மனைகளில் பட்டுக்கூடுகள்..
கூடுது வெப்பம்; குறையுது உற்பத்தி! புழு வளர்ப்பு மனைகளில் பட்டுக்கூடுகள்..
ADDED : பிப் 18, 2025 09:51 PM

உடுமலை ; வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பட்டுக்கூடு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தானியங்கி காற்றாடி மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில், 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
அதிலும், உடுமலை, பழநி, பொள்ளாச்சி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில், நுாற்றுக்கணக்கான விவசாயிகள் வெண் பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டு புழு வளர்ப்பு மனைகள், பட்டுப்புழுக்களுக்கு மல்பெரி செடிகள் சாகுபடி செய்து, இலைகள் உணவாக வழங்கப்பட்டு, கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.
பட்டுப்புழுக்கள், முட்டைகளிலிருந்து, ஏழு நாட்கள் இளம்புழு வளர்ப்பு மனைகளில் வளர்க்கப்பட்டு, 21 நாட்கள் விவசாயிகளின் பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில், உரிய சீதோஷ்ண நிலை பராமரிக்கப்பட்டு, மல்பெரிய இலைகள் உணவாக வழங்கி வளர்க்கப்பட்டு, இறுதியில் அவை கூடு கட்டுகின்றன.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பட்டுக்கூடு உற்பத்தி கடுமையாக பாதித்து வருகிறது. பட்டுக்கூடு வளர்ப்பு மனைகளில். 24 டிகிரி செல்சியஸ் முதல், 27 டிகிரி செல்சியல் வரை மட்டுமே வெப்ப நிலை பராமரிக்க வேண்டும்.
இதிலிருந்து வெப்ப நிலை கூடினாலும், குறைந்தாலும், இளம் புழு இறப்பு, புழுக்கள் கூடு கட்டாதது உள்ளிட்ட சிக்கல் ஏற்பட்டு, தற்போது உற்பத்தி பெருமளவு பாதித்து வருகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், வெப்ப நிலையை குறைக்கும் வகையில், பட்டு புழு வளர்ப்பு மனைகளில், தானியங்கி காற்றாடி பொருத்தவும், பட்டு புழு வளர்ப்பு மனைகள் மேல் மற்றும் மல்பெரி செடிகள் பாதிக்காத வகையில், நீர்த்துளி விழும் வகையில் ஸ்பிரிங்ளர் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைக்க, பட்டு வளர்ச்சி துறை சார்பில், மானிய திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது, உற்பத்தி பாதிக்காத வகையில், பட்டுவளர்ச்சித்துறை சார்பில், தொழில் நுட்ப ஆலோசனைகள், உதவிகள் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பெருமளவு பாதிப்பு
தமிழக பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:
சீதோஷ்ண நிலை மாற்றம், முட்டை, தரமற்ற இளம்புழு வளர்ப்பு மனைகள், விலை சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், தொடர்ந்து, பட்டுக்கூடு உற்பத்தி தொழில் நலிவடைந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது, முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதனால், பட்டுக்கூடு உற்பத்தி பெருமளவு பாதித்துள்ளது. வெப்பம் அதிகரிப்பு காரணமாக, பட்டுப்புழுக்கள் இறப்பு, கூடு கட்டாமல் சோர்வாக இருப்பது, உற்பத்தி குறைவு என அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
பிப்., மாதமே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இன்னும் மூன்று மாதங்கள் வரை சமாளிக்க வேண்டியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், தற்போது, 50 சதவீதம் வரை குறைந்து வருகிறது.
எனவே, பட்டு வளர்ச்சித்துறை சார்பில், வெப்பத்தை சீராக பராமரிக்கும் வகையில், தானியங்கி காற்றாடி, நீர் துாவும் தெளிப்பான் உள்ளிட்ட உபகரணங்கள் மானிய விலையில் வழங்கவும், வெயில் காலத்திலும், பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்காத வகையில், உரிய தொழில் நுட்ப உதவிகள் வழங்க பட்டு வளர்ச்சித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பட்டு வளர்ச்சித்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, தெரிவித்தார்.