/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் துவக்கம் : விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
/
அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் துவக்கம் : விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் துவக்கம் : விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் துவக்கம் : விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
ADDED : அக் 24, 2025 11:57 PM

உடுமலை: உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, உடுமலை, மடத்துக்குளம் தாலுகா, பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசனத்திலுள்ள, 7,520 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த ஜூன் 7ம் தேதி நீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து, விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு, நாற்றங்கால் முறை, பாய் நாற்றங்கால் முறைகளில், நெல் நடவு செய்தனர். தற்போது, இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அறுவடை தீவிரமடைந்துள்ளது.
விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பதை தடுக்க, அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களை திறக்கவும், பருவ மழையும் துவங்கியுள்ளதால், விரைவில் அறுவடை மேற்கொள்ளும் வகையில், தேவையான இயந்திரங்கள் தருவிக்க அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து, மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில், நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட துவங்கியுள்ளது.
இங்கு, சன்ன ரக நெல், குவிண்டால், ரூ.2,545க்கும், பொது ரக நெல், குவிண்டால், 2,500க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் சாகுபடி விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:
அமராவதி ஆயக்கட்டு பகுதிகளான, கடத்துார், கணியூர், காரத்தொழுவு, சோழமாதேவி, கண்ணாடிபுத்துார், குமரலிங்கம் பகுதிகளில் நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது. தற்போது, இப்பகுதிகளில், 2,737 ஏக்கர் பரப்பளவில், குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, அறுவடை துவங்கியுள்ளது.
தற்போது, மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆதார விலையுடன், மாநில அரசு ஊக்கத்தொகையுடன் கொள்முதல் செய்யப்படுகிறது.
விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து கொள்ளலாம்.
தற்போது, பருவ மழையும் ஒரு சில இடங்களில் பெய்து வருவதால், நெல் மணிகளை, வயல்வெளிகளில் உரிய ஈரப்பதத்திற்கு காய வைக்க முடியாத நிலையில் உள்ள விவசாயிகள், ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்திலுள்ள உலர் களங்களில், கொண்டு வந்து காய வைத்து, அரசு கொள்முதல் மையத்தில் விற்பனை செய்யலாம்.
மேலும், கல்லாபுரம், ருத்திராபாளையம் பகுதிகளிலும், நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளதால், அந்தந்த பகுதி விவசாயிகள், அருகிலுள்ள கொள்முதல் மையங்களில் விற்பனை செய்து கொள்ளலாம்.
மேலும், அடுத்த சம்பா பருவத்திற்கு தேவையான நெல் விதை ரகங்களான, கோ-51, கோ-55, ஏடிடி- 54 ஆகிய ரக விதைகள், கிலோ ஒன்றுக்கு, ரூ.20 மானியத்தில் வேளாண் துறை சார்பில் வழங்கப்படுகிறது.
மேலும் நெல் சாகுபடிக்கு தேவையான, சிங்க் சல்பேட், நெல் நுண்ணுாட்டம், நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, சிங்க் பாக்டீரியா ஆகியவையும், வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில் தேவையான அளவு இருப்பு உள்ளது. இதனையும் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

